“என்னோட அதிரடி ஆட்டத்துக்கு இதுதான் காரணம்!”.. 'ஸ்பார்க்' ருத்துராஜ் கெய்க்வாட் ‘பளீச்’ பேட்டி!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் டி.20 தொடரின் நேற்றைய போட்டியில் சென்னை அணியும், கொல்கத்தா அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா வீரரான நிதிஷ் ராணா 87 ரன்களும், தினேஷ் கார்த்திக் 10 பந்துகளில் 21 ரன்களும் எடுக்க, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து கொல்கத்தா அணி 172 ரன்கள் எடுத்தது. பின்னர் 173 ரன்கள் எனும் இலக்கை துரத்தி களமிறங்கிய சென்னை அணியின் துவக்க வீரரான சேன் வாட்சன் 14 ரன்களில் விக்கெட்டை இழக்க, அம்பத்தி ராயூடு 38 ரன்களிலும், தோனி 1 ரன்களிலும் விக்கெட்டை இழந்து வெளியேறினர்.
ஆனால் அசராமல் ஆடிய ருத்துராஜ் கெய்க்வாட் கடந்து 53 பந்துகளில் 72 ரன்கள் எடுத்து 17.2 ஓவரில் விக்கெட்டை இழந்தார். அதனால் கடைசி 10 பந்துகளுக்கு 28 ரன்கள் தேவை என்ற நிலை சென்னை அணிக்கு ஏற்பட்டது. எனினும் அவரது அந்த அதிரடி ஆட்டம்தான் சென்னை அணியின் வெற்றியை தீர்மானித்தது எனலாம். பின்னர் ஜடேஜா 11 பந்துகளில் 3 சிக்ஸர் மற்றும் 2 பவுண்டரியுடன் 31 ரன்கள் குவித்து, சென்னை அணியை மாஸாக வெற்று பெறச் செய்தார்.
பின்னர் பேசிய ஆட்ட நாயகன் ருத்துராஜ் கெய்க்வாட், தன் மீது தான் வைத்திருந்த நம்பிக்கைதான், தனது பொறுப்பான ஆட்டத்திற்கு காரணம் என பேசினார். இது குறித்து அவர் பேசுகையில், “மகிழ்ச்சி. இன்னும் எனக்கு நம்பிக்கையும் கிடைத்துள்ளது. நான் எப்பொழுதும் என்னை நம்புவேன். சில போட்டிகளில் முதலில் மிக சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்த போது பிட்ச் கடினமாக இருந்ததாக நினைத்தேன், கொரோனாவும் எனக்குள் சில பாதிப்புகளை ஏற்படுத்தியது. கேப்டன் (தோனி) சொல்வது மாதிரி எல்லாத்தையும் சிரிப்புடன் கடந்து செல்கிறேன். அதனால் எதிர்காலத்தை பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை. அதிக நம்பிக்கையுடன் இருக்கிறேன். நாங்கள் வெளியேறியதாக எண்ணவில்லை. முதல் ஆட்டம் போலதான் இதுவும் இருக்கிறது!” என்றார்.
மற்ற செய்திகள்