'13வது ஐபிஎல் போட்டி ஒத்திவைப்பு!' .. 'கொரோனா தாக்கம் குறையாததால்' பிசிசிஐ அதிரடி!
முகப்பு > செய்திகள் > விளையாட்டு13- வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 29ம் தேதி மும்பையில் தொடங்கவிருந்ததை அடுத்து நாடு முழுவதும் கொரோனா அச்சத்தால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
21 நாட்கள் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு, ஏப்ரல் 14ஆம் தேதி வரை தொடர்ந்த நிலையில், பின்னர் மீண்டும் அந்த ஊரடங்கு மேலும் 18 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது. முன்னதாக வெளிநாட்டினருக்கான விசா ரத்து செய்யப்பட்டதால் வெளிநாட்டு வீரர்கள் இந்தியாவுக்கும் இந்திய வீரர்கள் வெளிநாட்டுக்கும் சென்று விளையாட முடியாத சூழ்நிலை இருந்தது.
இதனை அடுத்து மத்திய அரசாங்கத்தின் அடுத்தகட்ட நிலைப்பாட்டை பொருத்து ஐபிஎல் கிரிக்கெட் நடக்குமா? நடக்காதா? என்பது தீர்மானிக்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் ஏற்கனவே கூறியிருந்தனர். இந்த நிலையில் இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் தீவிரமாகி வருவதால் மே-3-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.
இதனால் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் ஐபிஎல் அணி உரிமையாளர்களுடன் மேற்கொண்ட ஆலோசனையை அடுத்து ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. ஒருவேளை அக்டோபர், நவம்பர் மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ள 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தள்ளிவைக்கப்பட்டால், அந்த சமயத்தில் ஐபிஎல் போட்டித்தொடர் நடத்தப்படலாம் என்றும் சிலர் கருத்து கூறி வருகின்றனர்.