ஐபிஎல் 'ஏலத்தில்'... விலைபோகாத 'நோட்புக்' வீரர்... என்ன காரணம்?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசமீபத்தில் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. போட்டியின்போது வெஸ்ட் இண்டீஸ் பவுலர் கெஸ்ரிக் வில்லியம்ஸின் ஓவரில் சிக்ஸர் பறக்கவிட்ட கோலி, காற்றில் நோட்புக்கில் எழுதுவது போல சைகை காட்டினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.
இதுகுறித்து கோலி, ''2 வருடங்களுக்கு முன் 2017-ம் ஆண்டு ஜமைக்காவில் போட்டி நடைபெற்றது. அப்போது கெஸ்ரிக் வில்லியம்ஸ் எனது விக்கெட்டை எடுத்து விட்டு, நோட்புக்கில் குறித்து வைத்துக்கொள்ளும்படி சைகை காட்டினார். அந்த நோட்புக்கை தான் நான் இன்று அவரிடம் கொடுத்தேன்,'' என போட்டி முடிந்தபின் தெரிவித்தார்.
2-வது டி20 போட்டியில் கோலி சொற்ப ரன்களில் அவுட் ஆனார். அப்போது வில்லியம்ஸ் ஷ்ஷ் என்று சைகை காட்டினார். இதற்கு 3-வது டி20 போட்டியில் கோலி பதிலடி கொடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் பந்துகளை அடித்து நொறுக்கிய கோலி வில்லியம்ஸ் பந்தில் ஒரு மெகா சிக்ஸ் பறக்கவிட்டு அவ்ளோ தூரம் போயிடுச்சா? என்பதுபோல சைகை காட்டினார். இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது.
இதனால் ஐபிஎல் ஏலத்தில் வில்லியம்ஸை எந்த அணி ஏலத்தில் எடுக்க போகிறது? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவியது. ஆனால் 50 லட்சம் அடிப்படை விலையுடன் ஏலத்தில் கலந்துகொண்ட வில்லியம்ஸை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. காட்ரல், ஹெட்மெயர் போன்ற வீரர்களை ஏலத்தில் எடுத்ததாலும் பிராவோ, பொல்லார்டு, சுனில் நரைன், கெயில்,ஆண்ட்ரூ ரஸல் என ஏகப்பட்ட வீரர்கள் ஏற்கனவே ஐபிஎல் அணிகளில் இடம்பெற்று இருப்பதும் வில்லியம்ஸ் ஏலம் போகாமல் இருந்ததற்கு காரணமாக கூறப்படுகிறது.
வில்லியம்ஸ் ஏலம் போகாதது வருத்தமாக இருப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.