‘போட்டியை மாற்றிய மனிஷ் பாண்டேவின் சிக்ஸ்’.. ‘மீண்டும் சூப்பர் ஓவர்’.. கடைசியில் நடந்த பரபரப்பான முடிவுகள்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் டி20 லீக் 12 -வது சீசனில் 2 -வது முறையாக சூப்பர் ஓவரில் முடிந்துள்ளது.
ஐபிஎல் டி20 லீக்கின் 51 -வது போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் ஷர்மா மற்றும் டி காக் களமிறங்கினர்.இதில் ரோகித் ஷர்மா 24 ரன்களில் அவுட்டாக, அடுத்து வந்த சூர்யகுமார் யாதவுடன் ஜோடி சேர்ந்த டி காக் அதிரடியாக ஆட ஆரம்பித்தார். இதில் சூர்யகுமார் யாதவ் 23 ரன்களில் அவுட்டாகினார். அடுத்து வந்த வீரர்களும் தொடர்ந்து அவுட்டாக 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்களை மும்பை குவித்தது. இதில் அதிகபட்சமாக டி காக் 69 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதனைத் தொடர்ந்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக மனிஷ் பாண்டே 71 ரன்கள் அடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனை அடுத்து போட்டி சமனில் முடிந்ததால் சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் 1 ஓவருக்கு 8 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து களமிறங்கிய மும்பை அணி 9 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.