இத எல்லாம் பக்காவா செஞ்சாலே போதும்.. இந்தியா மேட்ச் ஜெயிச்ச மாதிரி தான்.. முழு விவரம் உள்ளே

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தென்னாப்பிரிக்க  அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி, நாளை நடைபெறவுள்ள நிலையில், அதில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்றால், சில முக்கியமான விஷயங்களை சரி செய்ய வேண்டியுள்ளது.

இத எல்லாம் பக்காவா செஞ்சாலே போதும்.. இந்தியா மேட்ச் ஜெயிச்ச மாதிரி தான்.. முழு விவரம் உள்ளே

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே, இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை பார்ல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. முதல் போட்டியும் இதே மைதானத்தில் தான் நடைபெற்றிருந்தது.

முன்னதாக, மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டியில், தென்னாப்பிரிக்க அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியிருந்தது. இதனால், நாளையை போட்டியில், இந்திய அணி தோல்வி அடைந்தால், தொடரை இழக்க நேரிடும்.

கேப்டன் ராகுல்

ஏற்கனவே, தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை, இந்திய அணி இழந்த நிலையில், ஒரு நாள் தொடரை வென்று காட்டும் முனைப்பில் இந்திய அணி உள்ளது. காயம் காரணமாக ரோஹித் ஷர்மா தென்னாப்பிரிக்க தொடரில் இருந்து விலகியுள்ளதால், அவருக்கு பதிலாக கே எல் ராகுல், ஒரு நாள் தொடரின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

விமர்சனம்

முதல் ஒரு நாள் போட்டியில், இந்திய அணி தோல்வி அடைந்ததற்கு கேப்டன் ராகுல் எடுத்த சில முடிவுகள் தான் காரணம் என பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். தென்னாப்பிரிக்க அணியின் மீடியம் பாஸ்ட் பவுலர்கள், சிறப்பாக பந்து வீசி, விக்கெட்டுகளை எடுத்தனர். ஆனால், இந்திய அணியில் இடம்பெற்றிருந்த வெங்கடேஷ் ஐயரை, ஒரு ஓவர் கூட பந்து வீசும் படி, ராகுல் அழைக்கவில்லை.

மிடில் ஆர்டர் சிக்கல்

வெண்டர் - பாவுமா ஜோடி , 200 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த போது, வெங்கடேஷிற்கு பந்து வீச வாய்ப்பு கொடுத்திருந்தால் ஒரு வேளை விக்கெட் வேகமாக வீழ்ந்து, இந்திய அணி வெற்றி பெறவும் ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கலாம். மேலும் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங்கும் கடுமையான விமர்சனத்தினை சந்தித்திருந்தது.

என்ன மாற்றங்கள்?

இதனிடையே, நாளை நடைபெறும் போட்டியில், மீண்டும் அதே தவறினை இந்திய அணி மேற்கொண்டால், நிச்சயம் தொடரை இழக்க நேரிடும். இதனால், நாளைய போட்டியில், என்னென்ன மாற்றங்களை இந்திய அணி மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றி காண்போம்.

சூர்யகுமார் யாதவ்

இந்திய அணியின் பெரிய தலைவலியாக இருப்பது மிடில் ஆர்டர் பேட்டிங் வரிசை தான். கடந்த சில ஆண்டுகளாக, இந்திய அணியின் பெரிய சிக்கலாக இது அமைந்துள்ளது.

வெங்கடேஷ் ஐயருக்கு ஓவர் கொடுக்கவில்லை என்றால், அவருக்கு பதிலாக சூர்யகுமாரை களமிறக்கலாம். அதிரடியாகவும், அதே வேளையில், போட்டியின் சூழ்நிலைக்கேற்ற வகையில் ஆடும் அவர், நிச்சயம் மிடில் ஆர்டரில் வலு சேர்க்க வாய்ப்புள்ளது.

தொடக்க ஜோடி

கடந்த போட்டியில், இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் சிறப்பாக ஆடியிருந்தாலும், ராகுல் 12 ரன்களில் நடையைக் காட்டினார். இந்திய அணியை பொறுத்தவரையில், மிடில் ஆர்டர் சிக்கலை ஓரளவுக்கு சரி செய்ய வேண்டும் என்றால், தொடக்க ஜோடி குறைந்தது 15 - 20 ஓவர் வரையிலாவது அவுட்டாகாமால் களத்தில் நிற்க வேண்டியது கட்டாயமாகும். இந்த பொறுப்பினை உணர்ந்து, ராகுல் - ஷிகர் தவான் ஜோடி சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தே ஆக வேண்டும்.

டாஸ்

அதே போல, கடந்த போட்டியில் டாஸ் கூட முக்கிய பங்கு வகித்தது. தென்னாப்பிரிக்க  அணி டாஸ் வென்று முதல் பேட்டிங் எடுத்ததால், நல்ல ஸ்கோரை இலக்காக எட்டி, வெற்றியும் பெற்றது. இரண்டாவது போட்டியும் அதே மைதானத்தில் நடைபெறவுள்ளதால், டாஸும் இந்திய அணியின் வெற்றிக்கு, முக்கிய பங்காக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

பவுலிங் ரொட்டேஷன்

இதே போல, இந்திய அணியின் பவுலிங் ரொட்டேஷனும் சிறந்த முறையில் இருக்க வேண்டியது மிக அவசியம். ஆரம்பத்தில், சிறப்பாக பந்து வீசிய இந்திய அணி, நடுவில் ரன்களை வாரி வழங்கியது.

இதனை பயன்படுத்திக் கொண்ட தென்னாப்பிரிக்க  அணி, அதிரடியாக ஆடி ரன் குவித்தது. அந்த தவறு நாளையும் நிகழ்ந்து விடாமல், சுழற்பந்து வீச்சுக்கும், வேகப்பந்து வீச்சுக்கும் என சரியான நேரத்தில் ரொட்டேஷன் செய்வதில் ராகுலின் கேப்டன்சி திறன் அடங்கி இருக்கிறது.

சிறந்த ஆல் ரவுண்டர்

மிடில் ஆர்டர் சிறப்பாக அமைவதைப் போல, இந்திய அணியில் இடம்பெறும் ஆல் ரவுண்டரும் சிறப்பான பங்களிப்பை, பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் வழங்க வேண்டும். நேற்றைய போட்டியில், பந்து வீசாத வெங்கடேஷ் ஐயர், 2 ரன் மட்டுமே அடித்து அவுட்டானார். மறுபக்கம், பவுலிங்கில் கோட்டை விட்ட ஷர்துல் தாக்கூர், பேட்டிங்கில் 50 ரன்கள் அடித்து அசத்தியிருந்தார்.

இதனால், இரண்டிலும் சிறப்பாக செயல்படக் கூடிய ஆல் ரவுண்டரை தகுந்த முறையில், இந்திய அணி பயன்படுத்த வேண்டும்.

திரும்பி வரணும்

இப்படி, முதல் போட்டியில் தங்களிடம் உள்ள நிறை குறைகளை சரிவர ஆராய்ந்து, அதனை திருத்திக் கொண்டால், நிச்சயம் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி, தொடரை சமன் செய்து விடலாம்.

அது மட்டுமில்லாமல், கேப்டனான முதல் போட்டியிலேயே கடுமையான விமர்சனத்தை சந்தித்துள்ள ராகுல், இதனை எல்லாம் சரி செய்தால் தான் தன்னுடைய திறனை நிரூபித்துக் காட்ட முடியும்.

KL RAHUL, IND VS SA, VIRAT KOHLI, VENKATESH IYER, SHIKHAR DHAWAN

மற்ற செய்திகள்