'ஐபிஎல் தொடருக்குப் பின் தோனி விளையாடுவாரா?'... 'ரவி சாஸ்திரியின் பரபரப்பு பதில்!'...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடவில்லை என்றால் தோனி விடைபெற்றுக்கொள்வார் என ரவிசாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிக்குப் பிறகு, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி எந்தப் போட்டியிலும் விளையாடவில்லை. பல்வேறு தொடர்களில் இந்திய அணி விளையாடி வரும் நிலையிலும், எந்த தொடரிலும் அவர் இடம்பெறவில்லை. மேலும், கடந்த சில தினங்களுக்கு முன், இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட இந்த ஆண்டிற்கான ஒப்பந்தப் பட்டியலிலும் தோனி இடம்பெறவில்லை. இது ரசிகர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியது.
இத்தகைய சூழலில், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி, ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில், "ஐபிஎல் தொடர் வரவிருக்கிறது. அவருக்கும் அது தெரியும். தேர்வாளர்களுக்கும் தெரியும். கேப்டன் விராட் கோலியும் அவரது பேட்டிங்கை காண்பார். எல்லாவற்றையும் விட தோனிக்கே அது தெரியும். எல்லோருக்கும் நான் சொல்வது என்னவென்றால், அவர்தான் தன்னுடைய ஆடும் திறனை வெளிப்படுத்திக் காட்ட வேண்டும். அவரைப்பற்றி உங்களுக்கும் தெரியும், எனக்கும் தெரியும்.
அவர் மிகவும் நேர்மையானவர். தன்னால் விளையாட முடியாத போது டெஸ்ட் போட்டிகளை கைவிட்டார். அவர் தன்னுடைய பயிற்சியை தொடங்கிவிட்டாரா? இல்லையா? என்பது எனக்கு தெரியவில்லை. ஐபிஎல் தொடரில் முனைப்புடன் விளையாடுவார் என நான் நினைக்கிறேன். அவர் தயாராகவே உள்ளார். ஐபிஎல் தொடரில் சரியாக விளையாட முடியவில்லை என்றால், அவர் 'தேங்க் யு வெரி மச்' என்று கூறிவிடுவார்" என்று ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார்.