‘இந்தியா வேண்டுமென்றே 2 போட்டிகளில் தோற்கும்..’ முன்னாள் வீரர் கூறும் அதிர்ச்சிக் காரணம்..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஉலகக் கோப்பையில் தொடர் தோல்விகளால் விமர்சனத்துக்கு ஆளாகி வந்த பாகிஸ்தான் அணி தற்போது இரண்டு வெற்றிகளுடன் அரையிறுதிக்கான போட்டியில் முன்னேறியுள்ளது.
தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாகிஸ்தான் அணி பலரது பாராட்டையும் பெற்று வருகிறது. இந்நிலையில் உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிக்குள் பாகிஸ்தான் நுழைவதை இந்தியா எப்போதுமே விரும்பாது என பாகிஸ்தான் முன்னாள் வீரர் பாசித் அலி கூறியுள்ளார். இதுபற்றிப் பேசியுள்ள அவர், “பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குத் தகுதி பெறுவதை இந்தியா எப்போதுமே விரும்பாது. அதற்காக வேண்டுமென்றே வங்க தேசம் மற்றும் இலங்கை ஆகிய அணிகளுக்கு எதிரான லீக் போட்டியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அந்த அணிகளின் ரன் ரேட்டை அதிகப்படுத்தும்.
இந்தியா வேண்டுமென்றே அவ்வாறு விளையாடித் தோற்றால் என்ன நடக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். கடந்த 1992ஆம் ஆண்டு உலகக் கோப்பையிலும் இதுபோலத் தான் நடந்தது. நியூசிலாந்து அணி வேண்டுமென்றே பாகிஸ்தானிடம் லீக் ஆட்டத்தில் தோற்று அரையிறுதியைத் தங்கள் நாட்டில் விளையாட வேண்டுமென விரும்பியது. ஆனால் நாங்கள் அரையிறுதியில் அவர்களைத் தோற்கடித்தோம் என்பது வேறு கதை. இதுபோல தங்களின் விருப்பத்திற்கு வெற்றி பெறுவதும், தோல்வியடைவதும் தற்போது பேஷனாகிவிட்டது” எனக் கூறியுள்ளார். பாசித் அலியின் இந்தக் கருத்துக்கு இந்திய ரசிகர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.