‘பயிற்சியின்போது’.. ‘ஹிட் மேனுக்கு காயம்’.. ‘அடுத்த போட்டியில் விளையாடுவதில் சிக்கல்’..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுவங்கதேச அணிக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கான பயிற்சியின்போது ரோஹித் ஷர்மாவுக்கு தொடைப்பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவிற்கு வந்துள்ள வங்கதேச அணி 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறது. முதலாவது டி20 போட்டி ஞாயிற்றுக்கிழமை டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற உள்ள நிலையில் இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். டி20 தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு பதிலாக ரோஹித் ஷர்மா இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இன்று பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டிருந்த ரோஹித் ஷர்மாவுக்கு இலங்கை வீரர் நுவான் வீசிய பந்தால் இடது தொடையில் காயம் ஏற்பட்டுள்ளது. அதிவேகத்தில் வந்த பந்தை ரோஹித் ஷர்மாவால் சமாளிக்க முடியாமல் போனதாலேயே காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் உடனடியாக பயிற்சியை பாதியில் கைவிட்டு, அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.
ரோஹித் ஷர்மாவுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது எனக் கூறியுள்ள அணி நிர்வாகம் விரைவில் மற்ற தகவல்களைக் கூறுவோம் எனத் தெரிவித்துள்ளது. இதனால் ஞாயிற்றுக்கிழமை நடக்கும் டி20 போட்டியில் ரோஹித் ஷர்மா விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.