‘அம்மோடியோவ்! இவ்ளோவா?'... 'பிசிசிஐக்கு குவிந்த விண்ணப்பங்கள்'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் பயிற்சியாளர்கள் பொறுப்புக்கு சுமார் 2,000 பேர் விண்ணப்பித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘அம்மோடியோவ்! இவ்ளோவா?'... 'பிசிசிஐக்கு குவிந்த விண்ணப்பங்கள்'!

உலகக் கோப்பை தொடருடன் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர், பேட்டிங், பௌலிங் எனப் பயிற்சியாளர்கள் குழுவின் பதவிக்காலம் முடிந்தது. இதையடுத்து, பயிற்சியாளர்கள் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது. விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜூலை 31-ம் தேதியுடன் முடிவடைந்தநிலையில், அதற்காக 2,000-த்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதிய பயிற்சியாளர் நியமிக்கப்படும்வரை இந்திய அணியின் தற்போதைய பயிற்சியாளர் ரவிசாஸ்திரி உள்ளிட்டோரின் பதவிக்காலம் 45 நாள்கள் நீட்டிக்கப்பட்டுள்ளன. இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு ரவிசாஸ்திரி மீண்டும் விண்ணப்பித்திருக்கிறார். அதேபோல், பந்துவீச்சுப் பயிற்சியாளர் பரத் அருண், பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் உள்ளிட்டோரும் தங்களது பதவிகளுக்காக மீண்டும் விண்ணப்பித்திருக்கிறார்கள்.

அதேபோல், ஆஸ்திரேலியாவின் டாம் மூடி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பயிற்சியாளரும், நியூசிலாந்தைச் சேர்ந்தவருமான மைக் ஹெசன, தென் ஆப்பிரிக்க முன்னாள் தொடக்க வீரர் கேரி கிர்ஸ்டன் உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும், ராபின் சிங், லால்சந்த் ராஜ்புத் போன்ற இந்தியாவைச் சேர்ந்தவர்களும் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதேபோல பந்து வீச்சாளர் பயிற்சிக்கு வெங்கடேஷ் பிரசாத்தும், பீல்டிங் பயிற்சிக்கு ஜான்டி ரோட்சும் விண்ணப்பித்து உள்ளனர்.

முன்னதாக, இலங்கை அணியின் முன்னாள் வீரரும், மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் அணியின் பயிற்சியாளருமான மஹேலா ஜெயவர்த்தனா, இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்புக்கு வர ஆர்வம் காட்டியதாகத் தகவல் வெளியானது. ஆனால், உரிய நேரத்தில் அவர் விண்ணப்பத்தை அனுப்பவில்லை எனத் தெரிகிறது. தற்போதைய சூழலில் கிரிக்கெட் உலகின் பிரபலமானவர்கள் யாரும் விண்ணப்பிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், ரவி சாஸ்திரி உள்ளிட்ட தற்போதைய குழுவே மீண்டும் பதவியேற்கும் என்று கூறப்படுகிறது.

BCCI, COACH, HEADCOACH, RAVISHASTRI