இந்திய அணியை அறிவிப்பதில் குழப்பம்.. ரோஹித் ஷர்மா தான் காரணமா?.. வெளியான லேட்டஸ்ட் தகவல்
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரின் இந்திய அணியை அறிவிக்க தாமதம் ஆகும் என தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆடி வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடருக்கு பிறகு ஒரு நாள் தொடரும் நடைபெறவுள்ளது.
டெஸ்ட் தொடருக்கு பல நாள் முன்பாகவே, அதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு விட்டது. ஆனால், ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்னும் அறிவிக்கவில்லை.
அணித் தேர்வில் தாமதம்
விஜய் ஹசாரே தொடரின் அடிப்படையில், அதில் சிறப்பாக ஆடும் வீரர்களையும் கணக்கில் கொண்டு, இந்திய அணி தேர்வு செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விஜய் ஹசாரே தொடர் முடிவடைந்த பிறகும், இந்திய அணி பற்றி அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை. அணியின் தேர்வு தாமதம் ஆவதன் காரணம் என்ன என்பது பற்றி, தற்போது சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
உடற்தகுதி
ஒரு நாள் போட்டியின் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள ரோஹித் ஷர்மாவிற்கு, தசை பிடிப்பு ஏற்பட்டது. இதனால், அவர் தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடருக்காக தேர்வாகவில்லை. மேலும், தற்போது அவர் பெங்களூரிலுள்ள தேசிய அகாடமியில் பயிற்சி பெற்று வருகிறார். அவர் இன்னும் முழுமையாக குணமடையவில்லை என தெரிகிறது.
கேப்டனாகும் கே.எல். ராகுல்?
இதனால், ரோஹித்தின் உடல்நிலை நிலவரம் என்ன என்பதை அறிந்து விட்டு, இம்மாத இறுதியில் (டிசம்பர் 30 அல்லது 31) அணியைத் தேர்வு செய்யலாம் என பிசிசிஐ தரப்பில் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நேற்று ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடந்ததாக கூறப்படுகிறது.
இதில், ரோஹித் ஷர்மாவின் உடல்நிலையை இந்த மாத இறுதி வரை கவனித்து, அதற்கேற்ப அணியை அறிவிக்கலாம். ஒரு வேளை, ரோஹித் முழு உடற்தகுதி பெறவில்லை என்றால், கே எல் ராகுலை கேப்டனாக நியமித்து அணியை அறிவிக்கலாம் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. அப்படி ஒருவேளை ரோஹித் பெயர் இடம்பெற்றாலும் கூட, அவர் Subject of Fitness என்னும் முறையில் தான் சேர்க்கப்படுவார் என்றும் கூறப்பட்டுள்ளது.
இன்னொரு சிக்கல்
மேலும், ஒரு நாள் தொடரின் முதல் போட்டி, ஜனவரி மாதம் 19 ஆம் தேதி ஆரம்பமாகிறது. இதற்கு இன்னும் 3 வாரங்கள் வரை இருப்பதால், ரோஹித் குணமடைந்து விடுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ரோஹித் ஷர்மா மட்டுமில்லாமல், வேறு சில முக்கிய வீரர்களும் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் பங்குபெறுவதில் சிக்கல் இருக்கிறது.
ஆல் ரவுண்டர்களான ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் படேல் ஆகியோரும் காயத்தால் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால், அவர்கள் ஒரு நாள் போட்டி அணியில் இடம்பிடிக்க மாட்டார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அப்படி நடக்கும் பட்சத்தில், சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினின் பெயர் ஒருவேளை இடம்பெற வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.
அஸ்வின் ரீ என்ட்ரி
டெஸ்ட் போட்டிகளில். தொடர்ந்து ஆடி வரும் ரவிச்சந்திரன் அஸ்வின், நான்கு ஆண்டுகளுக்கு பிறகு, டி 20 அணியில் (டி 20 உலக கோப்பை) மீண்டும் இடம்பிடித்தார். அதே போல, ஒரு நாள் போட்டிகளிலும் அஸ்வின் ஆடி, 4 ஆண்டுகள் ஆகி விட்டது. இதனால், தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில், அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
மற்ற செய்திகள்