வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடர்.. லிஸ்ட்டில் மிஸ் ஆன அஸ்வின் பெயர்.. இன்னொரு 'தமிழக' வீரர் பெயரும் மிஸ்ஸிங்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி 20 தொடருக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடர்.. லிஸ்ட்டில் மிஸ் ஆன அஸ்வின் பெயர்.. இன்னொரு 'தமிழக' வீரர் பெயரும் மிஸ்ஸிங்

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடர் முடிவடைந்துள்ள நிலையில், அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஒரு நாள் மற்றும் டி 20 தொடரில் இந்திய அணி பங்கேற்கவுள்ளது.

இந்தியாவில் வைத்து இந்த தொடர்கள் நடைபெறவுள்ள நிலையில், முதல் ஒரு நாள் போட்டி, பிப்ரவரி 6 ஆம் தேதி ஆரம்பமாகிறது. இதனைத் தொடர்ந்து மூன்று டி 20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி, பிப்ரவரி 16 ஆம் தேதி ஆரம்பமாகிறது.

ரோஹித் ஷர்மா கேப்டன்

இதற்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக, தென்னாப்பிரிக்க தொடரில் பங்கேற்காமல் போன ரோஹித் ஷர்மா, மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டு தொடர்களிலும், இந்திய அணியை ரோஹித் ஷர்மா வழி நடத்தவுள்ளார்.

அறிமுகம் ஆகும் இளம் வீரர்

இளம் வீரர்கள் மற்றும் சீனியர் வீரர்கள் என இந்திய அணி கலந்துள்ள நிலையில், தலா 18 பேர் கொண்ட இரண்டு அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நாள் தொடருக்கான இந்திய அணியை பொறுத்தவரையில், இளம் வீரர் ரவி பிஷ்னோய், முதல் முறையாக அணியில் இடம் பிடித்துள்ளார். மற்றொரு இளம் வீரரான தீபக் ஹூடா பெயரும் இடம்பெற்றுள்ளது. இதனைத் தவிர்த்து, சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவிற்கு மீண்டும் இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அஸ்வினுக்கு வாய்ப்பில்லை

சுமார் 4 ஆண்டுகளுக்கு பிறகு, ஒரு நாள் போட்டியில், தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக களமிறங்கிய ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு, அடுத்த தொடரிலேயே வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒரு நாள் தொடர் முடிவடைந்த பிறகு, ஒரு நாள் அணிக்கு அவர் செட் ஆக மாட்டார் என சஞ்சய் மஞ்ச்ரேக்கர், ஹர்பஜன் சிங் உள்ளிட்ட சில முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில், மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் மட்டும், அஸ்வினுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

அதே வேளையில், அஸ்வின் தற்போது தன்னுடைய சிகிச்சைக்கு வேண்டி, சுமார் ஒரு மாத காலம் ஓய்வு எடுத்துக் கொள்ளவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஒரு நாள் போட்டி அணி விவரம்

ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணி : ரோஹித் ஷர்மா (கேப்டன்), கே எல் ராகுல் (துணை கேப்டன்), ஷிகர் தவான், ருத்துராஜ் கெய்க்வாட், விராட் கோலி, சூர்ய குமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட், தீபக் சாஹர், ஷர்துல் தாக்கூர், யுஷ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், முகமது சிராஜ், பிரஷித் கிருஷ்ணா, ஆவேஷ் கான்

குணமடைந்த அக்சர் படேல்

டி 20 இந்திய அணியில், ருத்துராஜ் கெய்க்வாட்டிற்கு பதில், இஷான் கிஷானுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒரு நாள் போட்டியில் வாய்ப்பு கிடைக்காத வெங்கடேஷ் ஐயருக்கு டி 20 அணியில் இடம் கிடைத்துள்ளது. இளம் வீரர் ரவி பிஷ்னோய், டி 20 போட்டிக்கான அணியிலும் இடம் பிடித்துள்ளார்.

அதே போல, காயத்தால் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் இடம் பிடிக்காத அக்சர் படேல், அதிலிருந்து குணமடைந்துள்ளதால், டி 20 அணியில் இடம் பிடித்துள்ளார். தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் இரு தொடர்களிலும் இடம் பிடித்துள்ளார்.

டி 20 போட்டி அணி விவரம்

டி 20 போட்டிக்கான இந்திய அணி : ரோஹித் ஷர்மா (கேப்டன்), கே எல் ராகுல் (துணை கேப்டன்), இஷான் கிஷான், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்ய குமார் யாதவ், ரிஷப் பண்ட், வெங்கடேஷ் ஐயர், தீபக் சாஹர், ஷர்துல் தாக்கூர், ரவி பிஷ்னோய், அக்சர் படேல், யுஷ்வேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், புவனேஷ்வர் குமார், ஆவேஷ் கான், ஹர்ஷல் படேல்

ஓய்வு

இந்த இரண்டு தொடரில் இருந்தும், சீனியர் வேகப்பந்து வீச்சாளர்களான பும்ரா மற்றும் முகமது ஷமி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இவர்களைத் தவிர, இன்னும் காயத்தில் இருந்து மீளாத ரவீந்திர ஜடேஜாவிற்கும் அணியில் இடம் கிடைக்கவில்லை. அடுத்து இலங்கை அணிக்கு எதிரான தொடருக்கு முன், காயத்தில் இருந்து ஜடேஜா குணமடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக வீரர் மிஸ்ஸிங்

அதே போல, தமிழகத்தைச்  சேர்ந்த இளம் அதிரடி வீரர் ஷாருக் கான், சமீப காலமாக உள்ளூர் தொடர்களில் மிகவும் அதிரடியாக ஆடி, அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். ஒவ்வொரு தொடர்களிலும் இளம் வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஷாருக்கான் பெயர் இடம்பெறும் என்றே பலரும் கருதினர். ஆனால், அவருக்கு இந்த முறையும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில், இந்திய பந்து வீச்சாளர்கள் அதிகம் பேர் இடம் பெற்றுள்ளதால், ஆடும் லெவன் எப்படி அமையும் என்பது பற்றியும் தற்போதே அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

RAVICHANDRAN ASHWIN, RAVINDRA JADEJA, ROHIT SHARMA, IND VS WI, RAVI BISHNOI, SHAHRUKH KHAN, INDIA SQUAD

மற்ற செய்திகள்