“சூர்யகுமாரை விட ‘இவர்’தான் அதுக்கு சரிபட்டு வருவார்”- முன்னாள் விக்கெட் கீப்பரின் ஐடியா செட் ஆகுமா..?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா- நியூசிலாந்து போட்டியிடும் டி20 கிரிக்கெட் தொடர் தற்போது நடந்து வருகிறது. முதல் போட்டி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஜெய்பூரில் நடைபெற்றது. இதில் இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இன்று ராஞ்சியில் இரண்டாம் டி20 போட்டி நடைபெற உள்ளது.
இந்த சூழலில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கும் வரிசையில் சின்ன மாற்றத்தைக் கொண்டு வரலாம் என இந்திய அணியின் முன்னாள் விக்கெட்கீப்பர்- பேட்ஸ்மேன் ராபின் உத்தப்பா யோசனை கூறியுள்ளார். உத்தப்பாவின் யோசனைப்படி ஜெய்பூர் போட்டியில் சூர்யகுமார் விளையாடிய இடத்தில் ஸ்ரேயாஸ் ஐயரை களம் இறங்க வேண்டும் எனக் குறிப்பிடுகிறார்.
மேலும் உத்தப்பா கூறுகையில், “சூர்யகுமார் யாதவ பல திறன் நாயகன் ஆக இருக்கிறார். இதனால் இவர் இந்த ஆர்டரில் தான் விளையாட வேண்டும் என்று இல்லாமல் பேட்டிங் ஆர்டரில் மேலே, கீழே என அவரை மாற்றி அமைத்துக் கொள்ளலாம். சூர்யகுமாரை நான் 5 மற்றும் 6-ம் இடங்களில் விளையாடி பார்த்திருக்கேன். அந்த வரிசையில் அவர் சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தி இருக்கிறார். அதனால், சூர்யகுமாருக்கு பதிலாக பேட்ஸ்மேன்கள் ஆர்டரில் 3-வது இடத்தில் ஸ்ரேயாஸ் ஐயரை களம் இறக்கலாம். ஏனென்றால், ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்டத்தின் வேகத்தைப் பிடிக்க கொஞ்சம் நேரம் பிடிக்கும்.
சூர்யகுமாருக்கு அப்படியில்லை. அவர் களம் இறங்கிய அடுத்த நிமிடமே ஆட்டத்தின் வேகத்தைப் பிடித்து பந்துகளை விளாச ஆரம்பித்துவிடுவார். அதனால், சூர்யகுமாரை எந்த ஆர்டரில் இறக்கினாலும் அவரது பேட்டிங் அதிரடியாகத் தான் இருக்கும். ஆக, சூர்யாவை 4 அல்லது 5-ம் இடங்களில் களம் இறக்கலாம். இதன் மூலம் மிடில் ஆர்டரில் விளையாடும் ரிஷப் பண்ட்-க்கு ஆட்டத்தை சூர்யா உடன் சேர்ந்து முடித்து வைப்பதற்கான பலம் கிடைக்கும்.
சூர்யகுமாரை 4 அல்லது 5-ம் இடத்தில் வைக்கும் போது ரிஷப் பண்ட்-க்கு ஒரு நம்பிக்கை கிடைக்கும். இன்னிங்ஸை முடிக்க சூர்யகுமார்- ரிஷப் பண்ட் கூட்டணி உதவுவார்கள். காரணம், இந்திய அணிக்கு தற்போது ஒரு ‘ஃபினிஷர்’ தேவையாக இருக்கிறார். இவரை மிடில் ஆர்டரில் இறக்கினால் நிச்சயம் ஆட்டத்தை முடித்துக் கொடுப்பார் என்ற நம்பிக்கை அணிக்கு வேண்டியதாக இருக்கிறது. இது போன்ற சின்ன சின்ன முயற்சியகள் உலகக்கோப்பையை நோக்கி நகரும் நமக்கு உதவும்” எனப் பேசியுள்ளார்.
மற்ற செய்திகள்