இந்தியா ஜெயிக்கணும்னா ப்ளேயிங் 11-ல் இருந்து அந்த ‘3 பேரை’ முதல்ல தூக்குங்க.. இல்லைன்னா அவ்ளோ தான்.. நிபுணர்கள் எச்சரிக்கை..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் ப்ளேயிங் லெவனில் மூன்று மாற்றங்களை செய்ய வேண்டும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
டி20 உலகக்கோப்பை (T20 World Cup) தொடரின் சூப்பர் 12 போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியாவும், பாகிஸ்தானும் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 151 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 57 ரன்களும், விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் 39 ரன்களும் எடுத்தனர்.
இதனை அடுத்து பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்தது. அதில் தொடக்க ஆட்டக்காரர்களாக அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் களமிறங்கினர். இந்த ஜோடியை கடைசி வரை இந்திய அணியால் பிரிக்கவே முடியவில்லை. அதனால் 17.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 152 ரன்களை எடுத்து பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் உலகக்கோப்பை வரலாற்றில் முதல்முறையாக இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தியுள்ளது.
இந்த சூழலில் வரும் ஞாயிற்றுக்கிழமை (31.10.2021) நியூஸிலாந்தை எதிர்த்து இந்தியா விளையாட உள்ளது. ஏற்கனவே பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்துள்ளதால், இப்போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது. ஒருவேளை நியூஸிலாந்துக்கு எதிராக இந்தியா தோல்வியை தழுவினால், அரையிறுதி வாய்ப்பு கேள்விக்குறியாகிவிடும்.
அதனால் இந்திய அணியின் ப்ளேயிங் லெவனில் மூன்று மாற்றங்களை செய்ய வேண்டும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதன்படி ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவுக்கு பதிலாக இஷான் கிஷனை எடுக்க வேண்டும் கூறியுள்ளனர். அதற்கு காரணம், தற்போது பவுலிங் செய்யாமல் பேட்டிங் மட்டுமே ஹர்திக் பாண்ட்யா செய்து வருகிறார். ஆனால் பேட்டிங்கிலும் அவரால் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.
நடந்து முடிந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கடைசி நேரத்தில் களமிறங்கிய ஹர்திக் பாண்ட்யா, 8 பந்துகளை எதிர்கொண்டு 11 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதனால் அவருக்கு பதிலாக நல்ல ஃபார்மில் இருக்கும் இஷான் கிஷனை அணியில் எடுக்கலாம் என நிபுணர்கள் கூறியுள்ளனர். முன்னதாக நடந்த பயிற்சி ஆட்டத்தில் இஷான் கிஷன் அரைசதம் அடித்து அசத்தியிருந்தார்.
இதனை அடுத்து வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார், சமீப காலமாக தடுமாறி வருகிறார். நடந்து முடிந்த ஐபிஎல் தொடரிலும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக 11 போட்டிகளில் விளையாடிய அவர் 6 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்தார். அதேபோல் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் இவரது ஓவரில் சிக்சர், பவுண்டரிகள் பறந்தன. அதனால் புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக ஆல்ரவுண்டர் ஷர்துல் தாகூருக்கு வாய்ப்பு தரலாம் என கூறுகின்றனர். இவர் நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு முக்கிய வீரராக இருப்பார் என்று கருதப்பட்ட வருண் சக்கரவர்த்தியும், பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக பந்துவீசவில்லை. 4 ஓவர்களை வீசிய அவர், விக்கெட் ஏதுமின்றி 33 ரன்கள் விட்டுக்கொடுத்தார். அதனால் அவருக்கு பதிலாக அனுபவ சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு வாய்ப்பு தரலாம் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மற்ற செய்திகள்