இந்தியா-பாகிஸ்தான் டி20 உலகக்கோப்பை போட்டி நடக்குமா..? நடக்காதா..? பிசிசிஐ துணைத் தலைவர் அதிரடி பதில்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா-பாகிஸ்தான் இடையேயான டி20 உலகக்கோப்பை போட்டியை ரத்து செய்ய வேண்டும் என எழுந்த சர்ச்சைக்கு பிசிசிஐ துணைத்தலைவர் பதிலளித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 உலகக்கோப்பை (T20 World Cup) தொடர் நடைபெற்று வருகிறது. இதில் வரும் 24-ம் தேதி இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. அதற்கு முன்னதாக இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி விளையாடுகிறது.
அதில் நேற்று துபாய் மைதானத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 188 ரன்களை எடுத்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி, 19 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 192 ரன்களை எடுத்தது. இதில் கே.எல்.ராகுல் 51 ரன்களும், இஷான் கிஷன் 70 ரன்களும் எடுத்து அசத்தினர்.
இதனிடையே ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்று வருவதால், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான டி20 உலகக்கோப்பை தொடரை ரத்து செய்ய வேண்டும் என பஞ்சாப் மாநில அமைச்சர் பர்கத் சிங் கூறினார். அதேபோல் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்கும் இதே கருத்தை கூறினார். இது இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பி வருகிறது.
இந்த நிலையில், பிசிசிஐயின் துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா (Rajeev Shukla) இதற்கு பதிலளித்துள்ளார். அதில், ‘ஜம்மு-காஷ்மீரில் நடந்த வரும் வன்முறைகளை கண்டிக்கிறோம். இதை செய்த பயங்கரவாத அமைப்புகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான டி20 உலகக்கோப்பை போட்டி ஐசிசி கட்டுப்பாட்டின் கீழ் நடந்து வருகிறது. அதனால் எந்த அணிக்கும் எதிராக விளையாட முடியாது என்று மறுக்க முடியாது. ஐசிசி போட்டிகளில் கண்டிப்பாக விளையாட வேண்டும் என்பதால், இந்தியா-பாகிஸ்தான் போட்டியை ரத்து செய்ய முடியாது’ என ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்