‘இப்படி சொல்லுவார்ன்னு எதிர்பார்க்கவே இல்ல’.. ‘நட்புக்காக’ படம் பார்த்த மாதிரி இருக்கு.. மனசுல நின்னுட்டீங்க ‘சின்ன தல’..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதோனி ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை என்றால் தானும் விளையாட மாட்டேன் எனக் கூறி ரசிகர்களை சுரேஷ் ரெய்னா உருக வைத்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களான தோனியும், சுரேஷ் ரெய்னாவும் நீண்ட காலமாக நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர். சர்வதேச கிரிக்கெட்டில் இவர்கள் இருவரும் பல சாதனைகளை படைத்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்தார். தோனியின் இந்த திடீர் அறிவிப்பு ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது.
இதனைத் தொடர்ந்து சில நிமிடங்களில் யாரும் எதிர்பார்க்காத வகையில் சுரேஷ் ரெய்னாவும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இது ரசிகர்களுக்கு மற்றுமொரு அதிர்ச்சியாக அமைந்தது. அப்போது பலரும் சமூக வலைதளங்களில் தோனி - சுரேஷ் ரெய்னாவின் நட்பு குறித்து உருக்கமாக பதிவிட்டனர்.
தற்போது இருவரும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பாக விளையாடி வருகின்றனர். தோனியை சிஎஸ்கே ரசிகர்கள் ‘தல’ என அழைப்பது போல், சுரேஷ் ரெய்னாவை ‘சின்ன தல’ என அழைத்து வருகின்றனர். அந்த அளவுக்கு இருவரையும் சிஎஸ்கே ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில், சமீபத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த சுரேஷ் ரெய்னா, தோனி குறித்து உருக்கமாக பேசியுள்ளார். அதில், ‘இன்னும் சில ஆண்டுகள் என்னால் கிரிக்கெட் விளையாட முடியும். அடுத்த ஆண்டு 2 புதிய ஐபிஎல் அணிகள் அறிமுகமாக உள்ளன. ஆனால் நான் சென்னை அணிக்காக மட்டும்தான் விளையாடுவேன். இந்த ஆண்டு ஐபில் தொடரில் நாங்கள் சிறப்பாக விளையாடுவோம் என நம்புகிறேன்’ என சுரேஷ் ரெய்னா பேசினார்.
அப்போது தோனி குறித்த கேள்விக்கு பதிலளித்த சுரேஷ் ரெய்னா, ‘தோனி அடுத்த ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை என்றால் நானும் விளையாடமாட்டேன். 2008-ம் ஆண்டு முதல் இருவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறோம். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் நாங்கள் வெற்றி பெற்றால், அடுத்த ஆண்டும் ஐபிஎல்-ல் விளையாட வேண்டும் என தோனியிடம் பேசுவேன்’ என பதிலளித்தார். சுரேஷ் ரெய்னாவின் இந்த பேச்சு அவரது உண்மையான நட்பை வெளிப்படுத்துவதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் உருக்கமாக பதிவிட்டு வருகின்றனர்.
கடந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்ததும், ஐபிஎல் தொடரில் இருந்தும் தோனி ஓய்வு பெற உள்ளதாக செய்திகள் பரவின. அப்போது இதுகுறித்து தொகுப்பாளர் தோனியிடம் கேள்வி எழுப்பியபோது ‘Definitely Not’ என பதிலளித்தார். அதன்மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடுவதை தோனி உறுதி செய்தார்.
ஆனால், இந்த ஆண்டு சிஎஸ்கே அணி ஐபிஎல் கோப்பையை வென்றால், தோனி ஐபிஎல்-ல் இருந்து ஓய்வு பெற்றுவிடுவார் என சமூக வலைதளங்களில் பலரும் தெரிவித்து வந்தனர். இந்த சூழலில் தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன், ‘தோனி இன்னும் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் சென்னை அணிக்காக விளையாடுவார். கடுமையான உடற்பயிற்சி செய்து உடற்தகுதியுடன் இருக்கிறார். பின்னர் எதற்காக அவர் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற வேண்டும்’ எனக் கூறியிருந்தார். இதனால் அடுத்த ஆண்டும் ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற செய்திகள்