என்னங்க இதெல்லாம்.. ‘ஒரு இந்திய வீரர் பெயர் கூட இல்லை’!.. ரசிகர்களுக்கு செம ‘ஷாக்’ கொடுத்த ஐசிசி..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடி20 உலகக்கோப்பையில் சிறப்பாக விளையாடிய வீரர்களை கொண்டு ஐசிசி உருவாக்கிய அணி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி நேற்று முன்தினம் துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இதில் நியூஸிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதன்மூலம் டி20 உலகக்கோப்பையை முதல்முறையாக வென்று ஆஸ்திரேலியா வரலாறு படைத்துள்ளது.
இந்த நிலையில், டி20 உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களை கொண்ட அணியை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதில், பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். தொடக்க ஆட்டக்காரர்களாக ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் மற்றும் இங்கிலாந்து வீரர் ஜாஸ் பட்லர் தேர்வாகியுள்ளனர். இதனை அடுத்து இலங்கை வீரர் அசலங்கா, தென் ஆப்பிரிக்க வீரர் மார்க்ரம் மற்றும் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயில் அலி இடம்பெற்றுள்ளனர்.
சுழற்பந்து வீச்சாளர்களாக இலங்கையின் ஹசரங்கா, ஆஸ்திரேலியாவின் ஆடம் ஜாம்பா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அதேபோல் வேகப்பந்து வீச்சாளார்களாக ஆஸ்திரேலிய வீரர் ஜோஸ் ஹசில்வுட், நியூஸிலாந்து வீரர் டிரெண்ட் போல்ட், தென் ஆப்பிரிக்க வீரர் நோக்கியா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும் 12-வது வீரராக பாகிஸ்தானின் ஷாகின் அப்ரிடி இடம்பெற்றுள்ளார்.
ஆனால் இந்த பட்டியலில் இந்திய வீரர்கள் ஒருவர் கூட இடம்பெறவில்லை. விராட் கோலி, ரோஹித் ஷர்மா, பும்ரா, கே.எல்.ராகுல் ஆகிய முன்னணி வீரர்களில் ஒருவரின் பெயர் கூட இடம்பெறாதது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் வங்கதேச வீரர்களின் பெயரும் அதில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்