'ஒரு புள்ளியில் நம்பர் 1 இடத்தை'... 'இழந்த இந்திய கேப்டன்'... ‘மாஸ் காட்டிய மற்றொரு வீரர்’!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஒரே ஒரு புள்ளி வித்தியாசத்தில், இந்திய கேப்டன் விராட் கோலி முதலிடத்தை இழந்துள்ளார். இந்நிலையில் பந்துவீச்சு தரவரிசைப் பட்டியலில் பும்ரா முன்னேறியுள்ளார்.

'ஒரு புள்ளியில் நம்பர் 1 இடத்தை'... 'இழந்த இந்திய கேப்டன்'... ‘மாஸ் காட்டிய மற்றொரு வீரர்’!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்டின் 2-வது இன்னிங்சிலும், 2-வது டெஸ்டின் முதல் இன்னிங்சிலும் அரைசதம் அடித்ததால், விராட் கோலி முதல் இடத்தில் நீடித்தார். ஆனால், 2-வது டெஸ்டின் 2-வது இன்னிங்சில் முதல் பந்திலேயே டக்அவுட் ஆனதால், விராட் கோலிக்கு சறுக்கல் ஏற்பட்டது. இதனால் ஒரு புள்ளிகள் வித்தியாசத்தில் முதலிடத்தை தவறவிட்டார்.

டெஸ்ட் தரவரிசை பட்டியலில் கடந்த 2015 டிசம்பரில், ஆஸ்திரேலிய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஆன ஸ்டீவ் ஸ்மித் முதலிடத்தை பிடித்தார். அதிலிருந்து கடந்த 2018 ஆகஸ்ட் மாதம் வரை, ஸ்மித் தான் முதலிடத்தில் இருந்தார். தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரானப் போட்டியில், பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு தடை விதிக்கப்பட்டதால் ஸ்மித்தின் இடத்தை விராட் கோலி பிடித்தார்.

ஓராண்டு தடைக்குப்பின் ஆஷஸ் தொடரில் களம் இறங்கிய ஸ்மித், மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறி உள்ளார். ஸ்டீவ் ஸ்மித் 904 புள்ளிகளுடன் முதலிடத்திலும், விராட் கோலி 903 புள்ளிகள் உடன் 2-ம் இடத்தில் உள்ளனர். நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் 878 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், புஜாரா 825 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், நியூசிலாந்தின் ஹென்ரி நிக்கோல்ஸ் 749 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும் உள்ளனர். ரகானே 725 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் உள்ளார். 

இந்நிலையில், பந்துவீச்சு தரவரிசைப் பட்டியலில் பும்ரா 3-ம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். கடந்த வருடம் ஜனவரி மாதம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய பும்ரா, இதுவரை 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 62 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் முதல் டெஸ்டின் முடிவில் ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சுத் தரவரிசையில் 85-வது இடத்தைப் பெற்ற பும்ரா, தற்போது 12-வது டெஸ்டின் முடிவில் 3-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

 

VIRATKOHLI, ICC, STEVESMITH, ICCTESTRANKINGS