'ஃபர்ஸ்ட்' டைம் 'தோனி'ய பாத்தப்போ.. அவருக்கு பேட்டிங் சுத்தமா வராதுன்னு நெனச்சேன்.." அதுக்கு காரணம் அவர் பண்ண ஒரு வேல தான்.." மனம் திறந்த 'இளம்' வீரர்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவரான எம்.எஸ். தோனி (MS Dhoni), கிரிக்கெட் உலகில் மிகச் சிறந்த ஃபினிஷர் மற்றும் விக்கெட் கீப்பர்களில் ஒருவர்.
அது மட்டுமில்லாமல், இந்திய அணிக்காக, அனைத்து ஐசிசி கோப்பைகளையும் தனது தலைமையில் தோனி வென்றுக் கொடுத்துள்ளார். சர்வதேச அணியை சிறப்பாக வழி நடத்தியது போல, ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியையும் அவர் சிறப்பாக தலைமை தாங்கி வருகிறார். அவரது தலைமையில், மூன்று ஐபிஎல் கோப்பைகளைக் கைப்பற்றியுள்ள சிஎஸ்கே, சாம்பியன்ஸ் லீக் தொடரையும் இரண்டு முறை வென்றுள்ளது.
இந்தியாவில் ஐபிஎல் போட்டிகளைப் போல, மற்ற நாடுகளிலும் நடைபெறும் டி 20 தொடர்களின் அடிப்படையில் தேர்வாகும் அணிகள், இந்த சாம்பியன்ஸ் லீக் தொடருக்கு தகுதி பெறும். அப்படி, கடந்த 2010 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றிருந்த சாம்பியன்ஸ் லீக் தொடரில், சென்னை அணியும் தகுதி பெற்றிருந்தது. இந்த தொடரில், சென்னை அணியின் பயிற்சியின் போது பந்து வீசுவதற்காக, தென்னாப்பிரிக்க வீரர் அன்ரிச் நோர்ட்ஜே (Anrich Nortje), சென்னை அணியில் முகாமிட்டிருந்தார்.
அப்போது இளம் வீரராக இருந்த நோர்ட்ஜேவிற்கு, சிஎஸ்கே வீரர்கள் யார், என்ன என்பது பற்றி அதிகம் தெரியவில்லை. இந்நிலையில், அந்த சமயத்தில் தோனி பற்றி தான் என்ன நினைத்துக் கொண்டேன் என்பது பற்றி, நோர்ட்ஜே மனம் திறந்துள்ளார்.
'தோனிக்கு வலைப்பயிற்சியின் போது, பந்து வீசியது நினைவில் உள்ளது. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், அவர் பேட் செய்ததைப் பார்த்து, அவருக்கு பேட்டிங் தெரியாது என நான் நினைத்து விட்டேன். ஏனென்றால், அவர் அங்கு இருக்கவே விருப்பமில்லாமல் இருப்பது போல பயிற்சி செய்து கொண்டிருந்தார். ஆனால், முதலில் அது தோனி தான் அவர் என்பதையும் நான் அறியவில்லை.
அவர் சில பந்துகளை அடித்த சமயத்திலும், கால்களை சற்றும் கூட பெரிதும் நகர்த்தவில்லை. பின்னர், மெதுவாக தான், தோனி ஒரு சிறந்த மனிதர் என்பதையும், அவர் எப்படிப்பட்ட பேட்ஸ்மேன் என்பதையும் அதன் பிறகு நான் உணர்ந்து கொண்டேன்' என அன்ரிச் நோர்ட்ஜே தெரிவித்துள்ளார்.
கடந்த ஐபிஎல் சீசனில், டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக களமிறங்கிய நோர்ட்ஜே, தனது பந்து வீச்சின் வேகத்தால் எதிரணி பேட்ஸ்மேன்களை சிதறடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்