10 வருசம் நாட்டுக்காக ஆடியிருக்கேன்.. ஆனா எனக்கே ‘டி20 உலகக்கோப்பையில்’ விளையாட சான்ஸ் கொடுக்கல.. இனி 50 வயசு வரை ‘ஓய்வு’ பெற மாட்டேன்.. பரபரப்பை கிளப்பிய முன்னணி வீரர்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடி20 உலகக்கோப்பை தொடருக்கான வீரர்களின் பட்டியலில் இடம்பெறாதது குறித்து தென் ஆப்பிரிக்க வீரர் இம்ரான் தாஹிர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் அக்டோபர் மாதம் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. அதனால் இந்த தொடரில் விளையாட உள்ள வீரர்களின் பட்டியலை ஒவ்வொரு நாடும் அறிவித்து வருகின்றன. அந்த வகையில் தென் ஆப்பிரிக்க அணி, டி20 உலகக்கோப்பை தொடருக்கான வீரர்களின் பட்டியலை வெளியிட்டது. இதில் டு பிளசிஸ், இம்ரான் தாஹிர் போன்ற முன்னணி வீரர்களின் பெயர் இடம்பெறவில்லை. இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் டி20 உலகக்கோப்பை தொடரில் இடம்பெறாதது குறித்து இம்ரான் தாஹிர் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனியார் ஊடகத்துக்கு அவர் அளித்த பேட்டியில், ‘டி20 உலகக்கோப்பை அணியில் நான் இல்லை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கடந்த ஆண்டு கிரேம் ஸ்மித் என்னை தொடர்பு கொண்டு, உலகக்கோப்பையில் நீங்கள் விளையாட வேண்டும் என கூறினார். அதற்கு நான், நீங்கள் இப்படி கேட்டதை நான் கௌரவமாக கருதுகிறேன். உலகக்கோப்பை தொடரில் விளையாட நான் தயார். அதற்காக கடினமாக உழைக்கிறேன் என கூறினேன்.
அதற்கு அவர், அனைத்து கிரிக்கெட் தொடர்களிலும் உங்கள் திறமையைப் பார்த்த பின்பு தான் உங்களை தொடர்பு கொண்டு பேசினேன் என்றும் ஏபி டிவில்லியர்ஸ் மற்றும் டு பிளசிஸ் உள்ளிட்ட வீரர்களுடனும் பேச இருப்பதாகவும் கூறினார்.
ஆனால் அதன்பின்னர் யாரும் என்னை தொடர்பு கொள்ளவில்லை. சில மாதங்களுக்குப் பிறகு நான் ஸ்மித் மற்றும் பவுச்சருக்கு மெசேஜ் அனுப்பினேன். ஆனால் யாரும் எனக்கு பதிலளிக்கவில்லை. பவுச்சர் பயிற்சியாளரான பின்பு, அவருடைய திட்டங்கள் என்ன என்பதைச் சொல்ல அவர் ஒரு தடவை கூட என்னை தொடர்பு கொள்ளவில்லை. இது மிகவும் வருத்தமாக இருக்கிறது. நான் 10 ஆண்டுகள் நாட்டுக்கு சேவை செய்துள்ளேன். அதனால், நான் கொஞ்சம் மரியாதைக்கு தகுதியானவன் என்று நினைக்கிறேன்.
நான் தென் ஆப்பிரிக்கா அணிக்காக ஒரு உலகக்கோப்பையை வெல்ல வேண்டும். இந்த நாடு எனக்கு அளித்த வாய்ப்பிற்கு நன்றிக்கடன் செலுத்த நினைக்கிறேன். அதனால் இப்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணம் இல்லை, 50 வயது வரை விளையாடப் போகிறேன்’ என இம்ரான் தாஹிர் தனது சோகத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்