‘நான் ரஜினி சாரோட தீவிர ரசிகன்’!.. அவரோட படத்தை பார்ப்பதற்காகவே ‘சென்னை’ வருவேன்.. பன்ச் டயலாக் பேசி மாஸ் காட்டிய ‘KKR’ வீரர்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகொல்கத்தா நைட்ரைடர்ஸ் வீரர் ஒருவர் நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் என கூறியது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.
ஐபிஎல் (IPL) தொடரில் 34-வது லீக் போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இதில் இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் (KKR), ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் (MI) மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பவுலிங்கை தேர்வு செய்தது.
அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோஹித் ஷர்மாவும், டி காக்கும் களமிறங்கினர். நிதானமாக விளையாடிய இந்த ஜோடியை நீண்ட நேரமாக கொல்கத்தா அணியால் பிரிக்க முடியவில்லை. அப்போது சுனில் நரேன் வீசிய 10-வது ஓவரில் சுப்மன் கில்லிடம் கேட்ச் கொடுத்து ரோஹித் ஷர்மா (33 ரன்கள்) ஆட்டமிழந்தார்.
இதனை அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 5 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். இதனைத் தொடர்ந்து பிரஷித் கிருஷ்ணா ஓவரில் டிக் காக்கும் (55 ரன்கள்) ஆட்டமிழந்தார். இதனை அடுத்து வந்த வீரர்கள் பெரிதாக ரன்களை குவிக்காததால், 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 155 ரன்களை மும்பை அணி எடுத்தது.
இதனை அடுத்து பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, 15.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. இதனால் 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தி கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக ராகுல் திரிபாதி 74 ரன்களும், வெங்கடேஷ் ஐயர் 53 ரன்களும் எடுத்தனர். இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்துக்கு கொல்கத்தா அணி முன்னேறியுள்ளது.
இந்த நிலையில் போட்டி முடிந்த பின் பேசிய கொல்கத்தா வீரர் வெங்கடேஷ் ஐயர் (Venkatesh Iyer), ‘உண்மையை சொல்ல வேண்டுமானால், ஆரம்பம் முதலே கொல்கத்தா அணியில் சேர வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டேன். அதற்கு காரணம் சவுரவ் கங்குலி (Sourav Ganguly) தான். அப்போது அவர்தான் கொல்கத்தா அணிக்கு கேப்டனாக இருந்தார். அதனால் தான் கொல்கத்தா அணியை தேர்வு செய்தேன். இப்போது அந்த கனவு நிறைவேறியுள்ளது’ என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘ஆமாம், நான் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் (Rajinikanth) மிகப்பெரிய ரசிகன். அவரது அனைத்து படங்களையும் தவறாமல் பார்த்து விடுவேன். நான் இந்தூரில் இருந்தபோது, அவரின் படத்தை தியேட்டரில் பார்ப்பதற்காகவே சென்னை சென்றேன். என் வாழ்க்கையின் மிகப்பெரிய தருணமாக ரஜினிகாந்தை சந்திக்கும் நாள்தான் இருக்கும். அவரது படத்தில் “என் வழி தனி வழி” எனக்கு ரொம்ப பிடித்த பன்ச் டயலாக். இந்த டயலாக் மூலம் எனக்கு ஊக்கம் கொடுத்ததற்கு நன்றி ரஜினி சார்’ என வெங்கடேஷ் ஐயர் தெரிவித்துள்ளார். இது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.
நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி வெங்கடேஷ் ஐயரை ஒப்பந்தம் செய்தது. ஆனால் இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் அவருக்கு விளையாட வாய்ப்பு கொடுப்படவில்லை. இந்த நிலையில், கடந்த செவ்வாய் கிழமை பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் அறிமுக வீரராக வெங்கடேஷ் ஐயர் களமிறங்கினார். விளையாடிய முதல் போட்டியிலேயே 41 ரன்கள் அடித்து அசத்தினார். அதேபோல் நேற்றைய மும்பை அணிக்கு எதிரான போட்டியில் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார்.
மற்ற செய்திகள்