VIDEO: நீண்ட நாள் கனவு நிறைவேறிடுச்சு.. இந்திய இளம் வீரர் வீட்டு முன் ‘டான்ஸ்’ ஆடி கொண்டாடிய ஊர் மக்கள்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியில் இடம்பிடித்த இளம் வீரரின் வீட்டின் முன் ரசிகர்கள் நடனமாடி கொண்டாடிய வீடியோ இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர் வரும் பிப்ரவரி மாதம் தொடங்குகிறது. இந்த தொடரில் விளையாட உள்ள இந்திய வீரர்களின் பட்டியலை பிசிசிஐ நேற்று முன்தினம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. இதில் பல புதுமுக இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. குறிப்பாக ராஜஸ்தானை சேர்ந்த 21 வயது இளம் சுழற்பந்து வீச்சாளரான ரவி பிஷ்னோய்க்கு டி20 மற்றும் ஒருநாள் ஆகிய இரண்டு அணிகளிலும் இடம் கிடைத்துள்ளது.
கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோர் உலகக்கோப்பையில் விளையாடிய ரவி பிஷ்னோய், அந்த தொடரில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்திருந்தார். அதனைத் தொடர்ந்து 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய அவர், 23 போட்டிகளில் விளையாடி 24 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இந்த நிலையில் இந்திய அணியில் தற்போது இடம் கிடைத்துள்ளது. இதுகுறித்து பேசிய ரவி பிஷ்னோய், ‘சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக நான் விளையாட உள்ளதை நினைத்தால் பெருமையாக உள்ளது. இந்திய அணிக்காக விளையாடுவது என்பது என்னுடைய நீண்ட நாள் கனவு. இது தற்போது நிஜமாகியுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது.
இவ்வளவு நாட்களாக என்னுடைய வாய்ப்புக்காக நான் காத்திருந்தேன். அதற்காக என்னை தயார் படுத்திக்கொண்டு இருந்தேன். நிச்சயம் இந்த தொடரில் எனது சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்த முடியும். என்னை சிறப்பாக விளையாட வைத்த அனி கும்ப்ளே சாருக்கு நன்றி. அவர்தான் என்னை சரியான முறையில் வடிவமைத்தார்’ என ரவி பிஷ்னோய் கூறினார்.
Celebration outside Ravi Bishnoi's house after getting selected for Indian team today. Source: Indian Express pic.twitter.com/K8iEYboQVO
— Express Sports (@IExpressSports) January 26, 2022
இந்த நிலையில், ரவி பிஷ்னோய் இந்திய அணியில் தேர்வாகி இருப்பதை அறிந்த அவரது ஊர் மக்கள், ரவி பிஷ்னோயின் வீட்டின் முன் நடனமாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
மற்ற செய்திகள்