"'ரெண்டு' நாள் முன்னாடி தான்.. இந்தியா 'டீம்'ல 'சான்ஸ்' கிடைக்காம போனத நெனச்சு 'ஃபீல்' பண்ணாரு.. அதுக்குள்ள இப்டி ஆயிடுச்சே.." அதிர வைத்த 'பிசிசிஐ'??.. 'காரணம்' என்ன??
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணியைப் பொறுத்தவரையில், தற்போது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பஞ்சமேயில்லை.
முன்னணி பந்து வீச்சாளர்கள் வரிசையில், பும்ரா, ஷமி, இஷாந்த் ஷர்மா, புவனேஷ்வர் குமார் ஆகியோர் உள்ள நிலையில், இளம் பந்து வீச்சாளர்களில் நடராஜன், சிராஜ், நவ்தீப் சைனி ஆகியோரும் சர்வதேச போட்டிகளில், மிகச் சிறப்பாக பந்து வீசி வருகின்றனர். இதனிடையே, சர்வதேச அணியில் அதிக வாய்ப்புகள் கிடைக்காததால், மனம் நொந்து போயுள்ளார் ஜெய்தேவ் உனத்கட் (Jaydev Undakat).
இந்தியாவின் முதல் தர கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை போட்டியில், கடந்த 2019 - 2020 ஆம் ஆண்டு தொடரில் சவுராஷ்டிரா அணியின் கேப்டனாக, வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனத்கட் செயல்பட்டிருந்தார்.
இந்த சீசனில், மொத்தம் 60 விக்கெட்டுகள் மேல் வரை கைப்பற்றி அசத்திய உனத்கட், சவுராஷ்டிரா அணி கோப்பையை கைப்பற்றவும் மிக முக்கிய பங்காற்றியிருந்தார். 29 வயதாகும் உனத்கட், முதல் தர போட்டியில் சிறப்பாக பந்து வீசியிருந்தாதால், சர்வதேச அணியில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்தார். ஆனால், சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து தொடர்களில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
அடுத்ததாக நடைபெறவிருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் உனத்கட்டின் பெயர் இடம்பெறவில்லை. இது பற்றி சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்த உனத்கட், தனக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனதால், அதிகம் வேதனையடைந்ததாக குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும், சவுராஷ்டிரா அணியின் பயிற்சியாளராகவும் இருந்த கர்ஷன் கவ்ரி (Karsan Ghavri), இந்திய அணியில் உனத்கட் இடம் குறித்து சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். '2020 ஆம் ஆண்டில் ரஞ்சி டிராபி இறுதி போட்டி நடந்த சமயத்தில், தேர்வாளர் ஒருவரிடம், "உனத்கட் 60 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியுள்ளார். தனியாளாக, தனது அணியை இறுதி போட்டி வரை அவர் அழைத்து வந்தார். அவருக்கு 'இந்தியா ஏ' அணியிலாவது இடம் கொடுக்க கூடாதா?" என கேட்டேன்.
அதற்கு அந்த தேர்வாளர் என்னிடம், "அவர் இந்திய அணிக்கு இனிமேல் எப்போதும் தேர்வாக மாட்டார். நாங்கள் 30 வீரர்களின் பெயர்களை ஆலோசித்தால் கூட, அதில் உனத்கட் பெயர் இடம்பெறாது" என தெரிவித்தார். அதற்கு நான் உனத்கட், இத்தனை விக்கெட் வீழ்த்தியதற்கு பயன் என்ன என்று கேட்டேன். அதற்கு, அவரது வயது தான் அவரின் கிரிக்கெட் கேரியரை வீணாக்கி விட்டது என்றும், இது அவரை இந்திய அணியில் இடம் பிடிப்பதை நிறுத்தி விடும் என்றும் அந்த தேர்வாளர் என்னிடம் கூறினார்.
இதனால், உனத்கட்டின் வயதைக் கருத்தில் கொண்டு, அவருக்கு பதிலாக நீண்ட காலமாக இந்திய அணியில் விளையாடும் வீரர்கள் மீது கவனம் செலுத்தி வருகிறோம் என்றும் அந்த தேர்வாளர் என்னிடம் குறிப்பிட்டார்' என கர்ஷன் கவ்ரி தெரிவித்தார். உனத்கட் கடைசியாக, 2010 ஆம் ஆண்டு தென்னாபிரிக்க அணிக்கு எதிரான சர்வதேச டெஸ்ட் போட்டியில் விளையாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்