மேட்ச்சோட ‘திருப்புமுனையே’ இதுதான்.. அதுமட்டும் நடக்காம இருந்திருந்தா...! முன்னணி வீரர் செஞ்ச தப்பை மறைமுகமாக ‘குத்திக்காட்டிய’ பாபர் அசாம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 உலக்கோப்பை தொடரின் அரையிறுதிப்போட்டியில் தோல்வி அடைந்ததற்கான காரணத்தை பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் விளக்கியுள்ளார்.
பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான டி20 உலகக்கோப்பை (T20 World Cup) தொடரின் அரையிறுதிப்போட்டி நேற்று துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 176 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 67 ரன்களும், ஃபகார் ஜமான் 55 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரை மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளும், பேட் கம்மின்ஸ் மற்றும் ஆடம் ஜாம்பா ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, 19 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்தது. இதனால் 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை ஆஸ்திரேலியா வீழ்த்தியது. இதன்மூலம் டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு ஆஸ்திரேலிய அணி நுழைந்துள்ளது. இதில் அதிகபட்சமாக டேவிட் வார்னர் 49 ரன்களும், மேத்யூ வேட் 41 ரன்களும், மார்கஸ் ஸ்டோனிஸ் 40 ரன்களும் எடுத்தனர்.
சூப்பர் 12 சுற்றின் 5 போட்டிகளிலும் வெற்றி பெற்று பாகிஸ்தான் முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது. அதனால் இறுதிப்போட்டிக்கு பாகிஸ்தான் செல்ல அதிக வாய்ப்புள்ளதாக பலரும் கணித்தனர். ஆனால் நேற்றைய போட்டியில் கடைசி வரை போராடி தோல்வியை தழுவியதால், டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து பாகிஸ்தான் வெளியேறியது.
இந்த நிலையில், போட்டி முடிந்த பின் தோல்வி குறித்து பேசிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் (Babar Azam), ‘நாங்கள் திட்டமிட்டத்தை விட அதிக ரன்களே அடித்தோம். ஆனால் முக்கியமான நேரத்தில் சில கேட்ச்களை தவறவிட்டோம். இதுதான் போட்டியில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. ஒருவேளை அந்த கேட்சை பிடித்திருந்தால், போட்டியின் முடிவு வேறுமாதிரி இருந்திருக்கும். ஆஸ்திரேலியா போன்ற அணிகளுக்கு எதிராக இப்படி சொதப்பினால், அதன் முடிவு பயங்கரமாகதான் இருக்கும்’ என அவர் கூறினார்.
இப்போட்டியின் கடைசி 12 பந்துகளில் 22 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் ஆஸ்திரேலிய அணி இருந்தது. அப்போது ஆட்டத்தின் 19-வது ஓவரை பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சாஹின் அப்ரிடி (Shaheen Afridi) வீசினார். அந்த ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் 2 ரன் மட்டுமே சென்றது. இதனை அடுத்து 3-வது பந்தை ஆஸ்திரேலியாவின் மேத்யூ வேட் (Matthew Wade) எதிர்கொண்டார். அதை அவர் டீப் மிட் விக்கெட் திசையில் தூக்கி அடித்தார். அப்போது அங்கு நின்ற ஹசன் அலி (Hasan Ali) அந்த கேட்சை தவறவிட்டார்.
தொடரின்
இதன் விளைவு, அந்த ஓவரின் அடுத்த மூன்று பந்துகளில் ஹாட்ரிக் சிக்சர்களை மேத்யூ வேட் விளாசினார். இதுதான் ஆட்டத்தில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதனால் ஆஸ்திரேலிய அணி த்ரில் வெற்றி பெற்றது. இதைத்தான் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் குறிப்பிட்டு பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்