'என் கையில எதுவும் இல்ல, ஆனா...' 'இந்திய' அணியில் 'விளையாட' முடியலயேன்னு வருத்தப் படுறீங்களா...? முதன்முறையாக 'மனம்' திறந்த ஹர்சல் பட்டேல்...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் டி-20 தொடரில் நேற்று முன்தினம் (26-09-2021) நடைபெற்ற போட்டியில் விராட் கோலி தலைமையிலான ஆர்சிபி அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.
இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பவலிங் போட தேர்வு செய்ததை தொடர்ந்து, முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் குவித்தது. பெங்களூர் அணி சார்பில் அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 56 ரன்களும், கோலி 51 ரன்களும் அடித்து ஆர்சிபி ரசிகர்களின் வயிற்றில் பாலை வார்த்தனர்.
இதனையடுத்து 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எட்டக்கூடிய எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோஹித் சர்மா (43) மற்றும் டி காக் (24) நல்ல துவக்கம் கொடுத்த போதிலும், அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்களில் ஒருவர் கூட ஒற்றை இலக்க ரன்னை தாண்டாமல் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறியதால் 111 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த மும்பை இந்தியன்ஸ் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் மிக மோசமான தோல்வியை சந்தித்தது.
பெங்களூர் அணியின் இந்த முரட்டு வெற்றிக்கு சாஹல் மற்றும் ஹர்சல் பட்டேல் ஆகிய இருவரும் மிக முக்கிய காரணம். ஹர்சல் பட்டேல் 4 விக்கெட்டுகளையும், சாஹல் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணியை துண்டைக்காணோம் துணியைக்காணோம் என்று ஓடவிட்டனர்.
இதையடுத்து ஹர்சல் பட்டேல் மற்றும் சாஹல் ஆகியோரை ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் கொண்டாடி வருகின்றனர். அதேப் போல், பெரும்பாலான ரசிகர்கள் ஹர்சல் பட்டேலுக்கு இதுவரை இந்திய அணியில் வாய்ப்பே கிடைக்காதது ஏன் என தொடர்ச்சியாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில், இந்திய அணியில் தனக்கு இதுவரை வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து தான் இதுநாள் வரையிலும் வருத்தப்பட்டது கிடையாது என ஹர்சல் பட்டேல் கூறியுள்ளார்.
இது குறித்து ஹர்சல் பட்டேல் மேலும் பேசுகையில், “நான் எடுத்த முடிவுகள் தவறு என்று ஒருநாள் கூட வருத்தப்பட மாட்டேன். என்னால் எதையெல்லாம் ஒழுங்காக செய்ய முடியுமோ அதை மட்டும் தான் சிறப்பாக செய்து வருகிறேன். இந்திய அணியில் இடம் கிடைக்காதது குறித்து வருத்தம் கிடையாது. ஏன் அப்படி சொல்கிறேன் என்றால், அணி தேர்வு என்பது என்னுடைய கையில் இல்லை.
எனக்கான வாய்ப்பு எங்கு கிடைக்கிறதோ அங்கு எனது வேலையை சிறப்பாக செய்வது மட்டும் தான் எனது ஒரே லட்சியம். அது ஐபிஎல் தொடராக இருந்தாலும், இந்திய அணிக்காக இருந்தாலும் எனது வேலையை சரியாக செய்து கொடுக்க வேண்டும் என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன்” என கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்