சிக்ஸ், பவுண்டரி'ன்னு விளாசிய அயர்லாந்து வீரர்.. ஹர்திக் பாண்டியா கொடுத்த 'செம' பரிசு.. "கூடவே ஒண்ணு சொன்னாரு பாருங்க.."
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடி20 போட்டித் தொடருக்காக, அயர்லாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, அயர்லாந்து இளம் வீரருக்கு கொடுத்துள்ள பரிசு தொடர்பான செய்தி, தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இரண்டு டி20 போட்டிகள் கொண்ட தொடரை ஆடுவதற்காக அயர்லாந்து சென்றுள்ளது.
இதன் முதல் டி20 போட்டி, கடந்த 26 ஆம் தேதியன்று நடைபெற்றிருந்த நிலையில், மழை குறுக்கிட்டதன் காரணமாக போட்டி 12 ஓவர்களாக குறைக்கப்பட்டிருந்தது.
சூறாவளியாக மாறிய இளம் வீரர்
இதில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி, ஆரம்பத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது களம் கண்ட 22 வயதேயான ஹேரி டெக்டார், இந்திய அணியின் பந்துவீச்சை சிதறடித்தார். கடைசி வரை களத்தில் நின்ற அவர், 33 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்களுடன் மொத்தம் 64 ரன்கள் எடுத்திருந்தார். இதனால் 12 ஓவர்கள் முடிவில் அயர்லாந்து அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்திருந்தது.
ஹர்திக் பாண்டியா கொடுத்த பரிசு..
பின்னர் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி, 9.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டி அசத்தி இருந்தது. தீபக் ஹூடா, இஷான் கிஷான், ஹர்திக் பாண்டியா உள்ளிட்டோர் சிறப்பாக ஆடி இந்திய அணி வெற்றி பெறவும் வழி செய்தனர். இந்த போட்டிக்கு பின்னர், அயர்லாந்து இளம் வீரர் ஹேரி டெக்டாரை அழைத்து தனது பேட் ஒன்றை பரிசாக வழங்கினார் ஹர்திக் பாண்டியா. இந்திய அணி வெற்றி பெற்றிருந்தாலும் ஹேரியின் ஆட்டம் பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தது.
ஐபிஎல் வரைக்கும் ஆடணும்..
இந்த போட்டி முடிந்த பிறகு பேசிய ஹர்திக் பாண்டியா, "ஹேரி சில அற்புதமான ஷாட்டுகளை ஆடி இருந்தார். அவருக்கு 22 வயது தான் ஆகிறது. அதே போல, எனது பேட்டையும் நான் அவருக்கு பரிசாக அளித்திருந்தேன். அவர் இன்னும் நிறைய சிக்சர்கள் அடித்து, ஐபிஎல் ஒப்பந்தம் பெற வேண்டும் என நான் விரும்புகிறேன்.
டெக்டாரை சரியாக பார்த்துக் கொண்டு அவரை நல்ல முறையில் வழி நடத்த வேண்டும். இது கிரிக்கெட்டுக்காக மட்டும் கிடையாது. சொந்த வாழ்க்கைக்கும் சேர்த்து தான் சொல்கிறேன். அதனை மட்டும் அவரால் செய்ய முடிந்தால் அவர் நிச்சயம் ஐபிஎல் மட்டும் இல்லாமல் உலகில் உள்ள அனைத்து லீக் போட்டிகளிலும் ஒரு ரவுண்டு வருவார்" என ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது மற்றும் கடைசி டி 20 போட்டி, இன்று (28.06.2022) நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read | பல வருஷ காதல்.. திருமணத்திற்கு முன் காதலி செய்த விஷயம்.. மனம் பொறுக்காமல் இளைஞர் எடுத்த முடிவு
மற்ற செய்திகள்