"இஷாந்த் ஷர்மா தேவையே இல்ல.. அந்த பையன எடுங்க.. 'நியூசிலாந்துக்கே' ஆட்டம் காட்டுவான்.." ஹர்பஜன் சிங் கொடுத்த 'அட்வைஸ்'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇன்னும் ஒரு வாரத்தில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி, இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இதற்காக, இரு அணி வீரர்களும் தற்போது இங்கிலாந்தில் முகாமிட்டுள்ள நிலையில், முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையைக் கைப்பற்றி, சாதனை புரிய இரு அணிகளும் தீவிரமாக உள்ளனர். இதனால், ஐந்து நாட்களும் போட்டியில் நிச்சயம் பரபரப்பு இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த போட்டிக்காக, 20 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ தேர்வு செய்துள்ளது.
இந்திய அணியில் இளம் வீரர்கள் மற்றும் அனுபவம் மிக்க வீரர்கள், இரண்டறக் கலந்துள்ளதால், ஆடும் லெவனில் யார் எல்லாம் தேர்வாவர்கள் என்பதிலும் தற்போதே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இதற்காக, யாரை எல்லாம் அணியில் எடுக்க வேண்டும் என்பது பற்றியும், பல முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் (Harbhajan Singh), இந்திய அணியின் ஆடும் லெவன் பற்றி சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். 'நான் இந்திய அணியின் கேப்டனாக இருந்தால், மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அணியில் இடம் கொடுப்பேன். அந்த வகையில், பும்ரா மற்றும் ஷமி ஆகியோரை முதலில் எடுப்பேன். மூன்றாம் இடத்தில், இஷாந்த் ஷர்மாவிற்கு (Ishant Sharma) பதிலாக சிராஜுக்கே அணியில் இடம் கொடுப்பேன்.
இஷாந்த் ஷர்மா ஒரு சிறந்த பந்து வீச்சாளர் தான். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில், சிராஜ் (Siraj) தனது கிரிக்கெட் பயணத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் கண்டுள்ளார். தற்போதுள்ள நிலைமையை யோசித்து பார்த்தால், சிராஜிடம் உள்ள வேகம், தன்னம்பிக்கை ஆகியவை, அவரை இறுதி போட்டியின் சிறந்த தேர்வாக மாற்றுகிறது.
கடந்த ஆறு மாதங்களில் சிராஜின் ஃபார்ம், தனது வாய்ப்புக்காக ஏங்கி நிற்கும் ஒரு பந்து வீச்சாளரின் உணர்வைத் தருகிறது. நிச்சயம், அவர் நியூசிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு, நெருக்கடி கொடுப்பார். அதே போல, இஷாந்த் ஷர்மா கடந்த காலங்களில், சில காயங்களால் அவதிப்பட்டுள்ளார். ஆனால், இந்திய அணிக்காக தனது சிறந்த பங்கையும் அவர் ஆற்றியுள்ளார் என்பதில் சந்தேகமில்லை' என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து ஆடுகளங்கள், வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஆஸ்திரேலிய தொடரில், சிராஜின் அபாரமான பந்து வீச்சைக் கருத்தில் கொண்டு, அவரை அணியில் களமிறக்க வேண்டும் என பல முன்னாள் வீரர்கள் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்