இதுனால தான், ஒரு 'மேட்ச்' கூட ஆடாம கெளம்புனேன்... 'முதல்' முறையாக ஓப்பன் செய்த 'ஹர்பஜன் சிங்'...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகொரோனா தொற்று காரணமாக, கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றிருந்த நிலையில், இந்தாண்டுக்கான தொடர் இந்தியாவில் ஏப்ரல், மே மாதங்களில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, இதற்கான ஏலமும் இந்த மாதம் 18 ஆம் தேதி நடைபெறவுள்ளது. எட்டு அணிகளும் எந்தெந்த வீரர்களை தக்க வைத்துக் கொள்ளப் போகிறது என்பது பற்றியும், எந்தெந்த வீரர்களை வெளியேற்ற போகிறார்கள் என்பது பற்றிய பட்டியலையும் சில தினங்களுக்கு முன் வெளியிட்டிருந்தது.
இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கை சென்னை அணி வெளியேற்றியது. இதனையடுத்து, நடைபெறவிருக்கும் ஏலத்தில் ஹர்பஜன் சிங்கிற்கு ஆரம்பத் தொகையாக 2 கோடி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த சீசனில் சென்னை அணியில் இருந்தும் ஒரு போட்டியில் கூட ஆடாமல் ஹர்பஜன் சிங் இந்தியா திரும்பியிருந்தார். அவருக்கும், சிஎஸ்கே அணி நிர்வாகத்திற்கும் ஏதேனும் பிரச்சனைகள் உள்ளதாக வதந்திகள் கிளம்பின. இந்நிலையில், தான் ஏன் சென்னை அணியில் இருந்து ஆடாமல் இந்தியா திரும்பினார் என்பது பற்றியும், நடைபெறவுள்ள ஐபிஎல் சீசன் குறித்தும் ஹர்பஜன் சிங் மனம் திறந்து பேசியுள்ளார்.
'வரவிருக்கும் ஐபிஎல் சீசனுக்காக கடினமாக தயாராகி வருகிறேன். கடந்த சீசனிலும் நான் அதே போலத் தான் தயாராகிக் கொண்டிருந்தேன். ஆனால், கொரோனா பரவல் காரணமாக, என்னால் விளையாட முடியவில்லை. எனது குடும்பத்தினருடன் இருக்க வேண்டும் என முடிவு செய்தேன். அப்படி ஒரு சூழ்நிலையில், ஐபிஎல் போட்டிகளை தவிர்ப்பது சிறந்ததாக இருக்கும் என அப்போது நினைத்தேன். அதிகமாக கிரிக்கெட் போட்டிகளை நான் விளையாடாத நிலையில், இந்த ஐபிஎல் தொடருக்காக சிறந்த முறையில் தயாராகி வருகிறேன்' என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்