"எப்புட்றா விக்கெட்டை பறிகொடுக்கலாம்னு கிரவுண்ட்க்கு வராங்க".. - ஹர்பஜன் சிங்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியாவிற்கு எதிரான தொடரில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் விளையாடும் விதம் பற்றி விமர்சித்திருக்கிறார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங்.
Images are subject to © copyright to their respective owners.
தற்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான வரலாற்று சிறப்புமிக்க கவாஸ்கர் பார்டர் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. நான்கு போட்டிகளைக் கொண்ட இந்தத் தொடரில் முதல் போட்டி நாக்பூரில் வைத்து நடைபெற்றது. இதில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.
இதிலும் இந்திய அணி வெற்றி பெற்று 2 - 0 என்ற நிலையில் முன்னிலை பெற்று இருக்கிறது. முன்னதாக இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வது சவாலான காரியமாக இருக்கும் என ஆஸ்திரேலிய பயிற்சியாளர் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல இரு போட்டிகளிலும் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோரின் பங்களிப்பு அதிகமிருந்தது.
Images are subject to © copyright to their respective owners.
இந்த சூழ்நிலையில் இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி விளையாடியது குறித்து அந்நாட்டு முன்னாள் வீரர்களே விமர்சித்தும் வந்தனர். இதனிடையே, இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் ஆஸ்திரேலிய அணியை விமர்சித்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் பேசுகையில்,"ஆஸ்திரேலியா அணி அஸ்வினின் பந்துவீச்சை எதிர்கொள்ள அவரைப் போலவே வந்து பேசக்கூடிய இளைஞரை தேடிப் பிடித்து பயிற்சியில் ஈடுபட்டனர். ஆனால் ஆஸ்திரேலியா அணியே ஒரு நகல் என நான் நினைக்கிறேன். எப்போதுமே எதிர்மறையான விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர். மைதானம் பற்றியும் பந்துவீச்சாளர்கள் பற்றியும் யோசித்து குழப்பம் அடைவதால் பந்து வீசுவதற்கு முன்னதாகவே அவர்கள் தோற்றுவிடுகின்றனர்."
Images are subject to © copyright to their respective owners.
"அவர்களின் விளையாடும் விதத்தை பார்த்தால் போட்டிக்கு தயாராகி வந்தது போலவே தெரியவில்லை. விக்கெட்டை எப்படி இழப்பது என பயிற்சி பெற்றது போல தோன்றுகிறது. இந்த தொடரில் 4-0 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெறும். ஒரு வேளை இந்த தொடரில் 10 போட்டிகள் இருந்தாலும் பத்திலும் இந்தியாவில் வெற்றி பெறும். அந்த அளவிற்கு ஆஸ்திரேலியா அணி வீரர்கள் பலவீனமாக சிந்திக்கின்றனர். மைதானத்தில் பிரச்சனை இருந்தால் அதனை தைரியத்துடன் எதிர்கொள்ள வேண்டும். ஆனால் ஓய்வறையிலேயே ஆஸ்திரேலிய அணி வீரர்கள் சோர்ந்து விடுகின்றனர்" எனத் தெரிவித்திருக்கின்றார்.
மற்ற செய்திகள்