கங்குலி - தோனி.. இருவரில் யார் பெஸ்ட்?.. மனம் திறந்த ஹர்பஜன் சிங்..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் முதன்மை சுழற்பந்து வீச்சாளராக வலம் வந்த ஹர்பஜன் சிங், தனது 23 ஆண்டு கால கிரிக்கெட் பயணத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்திருந்தார்.
இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 400 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்துள்ள ஹர்பஜன் சிங், கடந்த 1998 ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானார். அது மட்டுமில்லாமல், டெஸ்ட் போட்டியில் ஹாட்ரிக் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையும் ஹர்பஜன் சிங் வசம் தான் உள்ளது. மொத்தமாக, 350 சர்வதேச போட்டிகள் வரை ஆடியுள்ள ஹர்பஜன் சிங், சுமார் 700 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தி, தனக்கான முத்திரையை இந்திய அணியில் பதித்திருந்தார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு, கடைசியாக சர்வதேச போட்டியில் களமிறங்கிய ஹர்பஜன் சிங்கிற்கு, அதன் பிறகு சர்வதேச போட்டியில் களமிறங்க வாய்ப்பு கிடைக்காமல் போனது. தொடர்ந்து, ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆடி வந்தார். தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தில், கங்குலி மற்றும் தோனி என இரண்டு பேரின் தலைமையிலும் ஏறக்குறைய சரிசமமான போட்டிகளில் அவர் ஆடியுள்ளார்.
யார் பெஸ்ட்?
இந்நிலையில், கங்குலி மற்றும் தோனி ஆகியோரில் யார் சிறந்த தலைமை என்பதற்கு விளக்கமளித்துள்ளார். 'இதற்கு நான் எளிதாக பதில் சொல்லுவேன். நான் கிரிக்கெட் கரியரில் ஒன்றுமே இல்லமால் இருந்த போது, என்னைச் சிறப்பாக கையாண்டவர் கங்குலி. ஆனால், தோனி கேப்டன் ஆன சமயத்தில், நான் ஏதோ ஓரளவுக்கு வீரராக மேம்பட்டு இருந்தேன். எனவே இதில் இருக்கும் வித்தியாசத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
கங்குலியின் பங்கு
என்னிடம் திறமை இருக்கிறது என்பது கங்குலிக்கு தெரியும். ஆனால், என்னால் அதனை வெளிக்காட்ட முடியுமா என்பது தெரியவில்லை. தோனியைப் பொறுத்தவரையில், முன்பு, பல போட்டிகளை நான் வென்று காட்டியுள்ளேன் என்பதும், அவரது தலைமையிலும் நான் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கையும் அவருக்கு இருந்தது.
வாழ்க்கையிலும், நமது தொழிலிலும், சரியான நேரத்தில் உங்களை சிறந்தபடி வழிநடத்த ஒருவர் தேவைப்படுவார். அப்படி எனக்கு கிடைத்தவர் தான் கங்குலி. எனக்காக போராடி, என்னை அவர் அணியில் சேர்க்காமல் போயிருந்தால், இந்நேரம் உங்களுக்கு இப்படி நான் பேட்டி கொடுத்திருப்பது கூட சில நேரம் நடக்காமல் போயிருக்கலாம். நான் இன்று, இப்படி இருப்பதற்கு முழுக்க முழுக்க காரணம் கங்குலி என்னும் சிறந்த தலைவர் தான்.
சிறந்த தருணங்கள்
ஆனால், தோனியும் ஒரு சிறந்த கேப்டன் தான். கங்குலி உருவாக்கிய அணியின் வளர்ச்சியை தோனியும் தொடர்ந்து நிலை நிறுத்தினார். தோனியுடன் சேர்ந்து, பலமுறை போராடி வெற்றி பெற்ற தருணங்களை நிச்சயம் எப்போதும் மனதில் வைத்திருப்பேன்' என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்