"இவர மாதிரி, ஒரு சிறப்பான 'பிளேயர்' இனிமேலும் 'கிரிக்கெட்'டுக்கு தேவப்படுறாரு.." - 'புகழாரம்' சூட்டும் முன்னாள் 'வீரர்'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணி வீரர் எம்.எஸ்.தோனி, கடந்த ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதியன்று அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்.
திடீரென ஓய்வு குறித்த அறிவிப்பை தோனி வெளியிட்டதால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். இந்திய கிரிக்கெட்டின் மிக முக்கிய கேப்டனான தோனியின் ஓய்வுக்கு பல கிரிக்கெட் வீரர்களும் தோனியுடனான தருணங்களை பகிர்ந்தனர். சர்வதேச போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு பெற்றுள்ள நிலையில், வரும் 19 ஆம் தேதி ஆரம்பிக்கப்படவுள்ள ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அவர் ஆடவுள்ளதால் அவரது ஆட்டத்தைக் காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். அதே வேளையில், அடுத்த சில ஆண்டுகளுக்கு அவர் ஐபிஎல் போட்டியில் களமிறங்குவார் என்றும் கருதப்படுகிறது.
இதனிடையே, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், விக்கெட் கீப்பருமான சபா கரீம் (Saba Karim), தோனி குறித்து கூறுகையில், 'அவர் உடலை கட்டுக் கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டி மிகவும் கடினமாக உழைக்கிறார் என்றே நான் நம்புகிறேன். அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெற்றுள்ளதால் அவரது சுமை தற்போது குறைந்துள்ளது' என்றார்.
மேலும், 'ஐபிஎல் போட்டி என்னும் குறைந்த ஓவர் போட்டிகளில் தோனி மிக முக்கிய பங்கு வகித்துள்ளார். இந்த டி20 தொடரில் தனது ஆக்ரோஷம் நிறைந்த ஆட்டத்தில் பல பரிமாணங்களை கொண்டு வந்தார். ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகில் தோனி போன்ற ஒரு சிறந்த வீரர் இனி வரும் காலங்களில் நிச்சயம் தேவை' என்றும் கரீம் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்