அவரு ரொம்ப 'Dangerous' பவுலர் ஆச்சே! பேட்டிங் வரவங்களுக்கு கண்ணு கலங்கிரும்... இந்திய வீரரை வியந்து பார்க்கும் கம்பீர்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய - தென் ஆப்ரிக்கா இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இன்னும் ஓரிரு நாளில் முடிவு தெரிந்துவிடும். இதுவரை நடந்து முடிந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஒரு போட்டியில் இந்தியாவும் இன்னொரு போட்டியில் தென் ஆப்ரிக்க அணியும் வெற்றிவாகை சூடியுள்ளன. இந்தப் போட்டியை வெல்பவர்களுக்கே தொடரைக் கைப்பற்றும் வாய்ப்பு கிடைக்கும்.

அவரு ரொம்ப 'Dangerous' பவுலர் ஆச்சே! பேட்டிங் வரவங்களுக்கு கண்ணு கலங்கிரும்... இந்திய வீரரை வியந்து பார்க்கும் கம்பீர்

தற்போது இந்திய கிரிக்கெட் அணி, தனது இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. இந்த இன்னிங்ஸ் மூலம் தென் ஆப்ரிக்காவுக்கு 250 ரன்களுக்கு மேல் டார்கெட் வைத்தால் அதை அடைவது கடினமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எது எப்படியோ ஆட்டம் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

மூன்றாவது டெஸ்ட் போட்டியைப் பொறுத்தவரை இந்திய அணி எதிர்பார்த்த அளவுக்கு முதல் இன்னிங்ஸில் பேட்டிங்கில் அதிக ரன்களை குவிக்க முடியவில்லை. 223 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. ஆனால் பந்துவீச்சில் சாதித்த இந்தியா, தென் ஆப்ரிக்காவை 210 ரன்களுக்கு சுருட்டியது.

இந்தியாவைப் பொறுத்தவரை ஜஸ்ப்ரீத் பும்ரா, அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி கலக்கினார். அது ஆட்டத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தாலும், திருப்பு முனையாக அமைந்தது முகமது ஷமியின் ஸ்பெல்தான். அவர் திடீரென வந்து 2 விக்கெட்டுகளை அடுத்தடுத்துக் கைப்பற்றி ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிட்டார். ஷமி, இப்படி ஆபாரமாக பந்து வீசி ஆட்டத்தை இந்தியா பக்கம் திருப்புவது இது முதல் முறையல்ல. இதே தொடரில் இதற்கு முன்னரும் பலமுறை இதைச் சாதித்துக் காட்டியுள்ளார்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர், ‘ஷமி, எப்போது பவுலிங் போட வந்தாலும் எதோ ஒன்று நடக்கப் போகிறது என்கிற எண்ணம் எழுகிறது. இந்தப் போட்டியில் மட்டுமல்ல தென் ஆப்ரிக்கத் தொடர் முழுவதும் இதை அவர் தொடர்ந்து செய்து கொண்டே இருந்தார்.

உலகின் எந்த டாப் பேட்ஸ்மேனை வேண்டுமானால் கேளுங்கள், அவர் மிகப் பெரும் அச்சுறுத்தல் என்பதை ஒப்புக் கொள்வார்கள். யாருக்கும் அவரை நேருக்கு நேர் சந்திப்பதில் அந்தளவுக்கு மகிழ்ச்சி இருக்காது. எப்போதும் ஸ்டம்புக்கு அருகிலேயே தன் பந்தை வைத்திருப்பார் ஷமி. அது போதாது என்று பந்தை இரண்டு பக்கமும் ஸ்விங் செய்கிறார். இதன் காரணமாக பேட்ஸ்மேன், அவர் வீசும் பந்தை விளையாடியே ஆக வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்படுகிறார். இதுதான் ஷமியை மற்றவர்கள் இடத்திலிருந்து வேறுபடுத்திக் காண்பிக்கிறது’ என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

CRICKET, கம்பீர், முகமது ஷமி, GAUTAM GAMBHIR, MOHAMMED SHAMI, TEAM INDIA

மற்ற செய்திகள்