இதுக்காக தான் தோனியை ஆலோசகராக போட்டிருப்பாங்க.. கரெக்ட்டா வந்து கருத்து சொன்ன கம்பீர்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு ஆலோசகராக தோனி நியமிக்கப்பட்டது குறித்து கௌதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் அக்டோபர் மாதம் 17-ம் தேதி டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இதற்கான இந்திய வீரர்களின் பட்டியலை நேற்று பிசிசிஐ அறிவித்தது. இதனை அடுத்து மற்றொரு சர்ப்ரைஸ் அறிவிப்பையும் பிசிசிஐ வெளியிட்டது. இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு ஆலோசகராக தோனி நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. யாரும் எதிர்பார்க்காத வகையில் வெளியான இந்த அறிவிப்பு ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
இந்த நிலையில் தோனி ஆலோசகராக நியமிக்கப்பட்டது குறித்து இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கௌதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் பேசிய அவர், ‘தோனிக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பு சரியாக இருக்கும் என நான் நம்புகிறேன். நம்மிடம் தலைமை பயிற்சியாளர், பவுலிங் பயிற்சியாளர், துணைப் பயிற்சியாளர்கள் உள்ளனர். ஏதாவது ஆலோசனை தேவையென்றால் அவர்களிடம் பெற்றுக்கொள்வார்கள்.
ஏனென்றால் டி20 கிரிக்கெட்டில் இந்தியா வெற்றிகரமான அணியாக உள்ளது. இந்தியா ஒன்றும் தடுமாறவில்லை. ஒருவேளை அப்படி தடுமாறியிருந்தால், வெளியில் இருந்து ஒரு ஆலோசனை தேவை. அநேகமாக தோனியின் அனுபவம் அல்லது அழுத்தமான தருணங்களை அவர் சிறப்பாக கையாளுவதால், ஆலோசகராக நியமிக்கப்பட்டிருக்கலாம் என நினைக்கிறேன். முழுமையாக திறமையின் அடிப்படையில் இருக்காது. ஏனென்றால் நம் வீரர்கள் ஏற்கனவே திறமையுடன்தான் உள்ளனர்.
இதுபோன்ற முக்கியமான போட்டிகளில் எப்படி அழுத்தங்களை கையாள வேண்டும் என்பது தெரிய வேண்டும். ஏனென்றால் சில முக்கியமான போட்டிகளின் நாக்அவுட் சுற்றில் இந்தியா தடுமாறியுள்ளது. அதனால் தோனியின் கேப்டன் திறமை, அழுத்தங்களை கையாளும் விதம் தற்போதுள்ள இளம் வீரர்களுக்கு உதவியாக இருக்கும் என நம்பிகிறேன்’ என கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்