"Basic என்னன்னு கூட உங்களுக்கு தெரியல.." கோலி செயலால் கடுப்பான கம்பீர்.. முன் வைத்த பரபரப்பு குற்றச்சாட்டு
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள், மிகவும் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்திருந்தது. அதன்படி, ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோஹித் ஷர்மா 29 ரன்களிலும், மயங்க் அகர்வால் 33 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
அடுத்ததாக களமிறங்கிய ஹனுமா விஹாரி அரைசதமடித்து அசத்தியிருந்தார். ரிஷப் பண்ட் 96 ரன்களும் எடுத்திருந்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 357 ரன்கள் என்ற சிறப்பான ஸ்கோரை எட்டியுள்ளது.
கோலியின் நூறாவது டெஸ்ட்
இந்த போட்டியில் அதிக எதிர்பார்ப்பு இருந்தது கோலியுடைய பேட்டிங் மீது தான். இதற்கு காரணம், இன்று களமிறங்கியது, அவரின் நூறாவது டெஸ்ட் போட்டி ஆகும். ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் பலர், கோலிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர்.
ரசிகர்கள் ஏமாற்றம்
கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக சர்வதேச போட்டிகளில் சதமடிக்காமல் இருந்து வரும் கோலி, இன்று நிச்சயம் சதமடித்து அசத்துவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், சிறப்பாக ஆட்டத்தை ஆடி வந்த அவர், 45 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை அளித்திருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் அதிகம் வேதனையை ஏற்படுத்தியிருந்தது. இருந்தாலும், இரண்டாவது இன்னிங்ஸில் வாய்ப்பு கிடைத்தால், சதமடிப்பார் என்றும் ரசிகர்கள் நம்பிக்கையில் உள்ளனர்.
குறை கூறிய கம்பீர்
இந்நிலையில், கோலி ஆட்டமிழந்தது பற்றி, இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். 'மிகப் பெரிய பிரச்சனை என்னவென்றால், கால் பேடுகளுக்கு அருகே பேட் வைத்து ஆடுவது தான். திரும்பி செல்லும் பந்துகளையும், நேராக வரும் பந்துகளையும் அடிக்க வேண்டுமென்றால், கால் பேடுக்கு முன்பு, பேட்டை வைத்து ஆட வேண்டும்.
அடிப்படையே மறந்து போச்சு
கால் பேடுகளுக்கு அருகே பேட்டை ஒட்டி வைத்துக் கொண்டிருந்தால், உடனடியாக ஆட முடியாமல் பந்து எட்ஜ் ஆகும். மயங்க் அகர்வால் மற்றும் கோலி ஆகிய வீரர்கள், பேட்டை பேடுக்கு அருகே வைத்து தான் ஆடி அவுட்டானார்கள். டெஸ்ட் கிரிக்கெட்டின் அடிப்படை விஷயம் இது தான். ஆனால், இன்றைய காலகட்டத்தில், டி 20 உள்ளிட்ட குறைந்த ஓவர் போட்டிகளை அதிகம் ஆடுவதால், அடிப்படை விஷயங்களையே அவர்கள் மறந்து விடுகின்றனர்.
கவனம் செலுத்த வேண்டும்
குறைந்த ஓவர் போட்டிகளின் காரணமாக, வேகப்பந்து வீச்சில் மட்டும் அதிக கவனத்தை மேற்கொள்கின்றனர். இதனால், இந்திய அணி வீரர்கள் இனிமேல், சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள அதிக கவனம் மேற்கொள்ள வேண்டும்' என கம்பீர் அறிவுறுத்தியுள்ளார்.
மற்ற செய்திகள்