நான் அப்படி ஏதும் பண்ணல.. கடுப்பான கங்குலி??.. மீண்டும் வெடித்த கோலி - பிசிசிஐ விவகாரம்
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகோலி - பிசிசிஐ விவகாரத்தில், கங்குலியின் செயல்பாடு குறித்து, தற்போது மீண்டும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான கடைசி ஒரு நாள் போட்டி தற்போது ஆரம்பமாகியுள்ளது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி, பீல்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.
ஏற்கனவே ஒரு நாள் தொடரை இழந்துள்ள இந்திய அணி, கடைசி ஒரு நாள் போட்டியில் ஆறுதல் வெற்றியை பெறும் முனைப்பில் உள்ளது. இதனிடையே, இந்திய அணி ஒரு நாள் தொடரை இழந்ததற்கு, அந்த அணியின் கேப்டன் கே எல் ராகுல் மீது கடுமையான விமர்சனம் எழுந்து வருகிறது.
கடும் அதிர்ச்சி
ரோஹித் ஷர்மா இல்லாத காரணத்தால், இந்திய அணியை ராகுல் வழிநடத்திய நிலையில், பல முடிவுகளை அவர் சரியாக எடுக்கத் தவறி விட்டார் என பலர் கருத்து தெரிவித்தனர். இதனிடையே, கடந்த தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடர் முடிந்ததும் அதன் கேப்டன் பதவியில் இருந்து திடீரென விராட் கோலி விலகியதும், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
அதிக கவனம்
முன்னதாக, கடந்த ஆண்டு நடைபெற்ற டி 20 உலக கோப்பைத் தொடருடன், அதன் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக கோலி அறிவித்திருந்தார். இனி வரும் நாட்களில், ஒரு நாள் போட்டி மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகம் கவனம் செலுத்தப் போவதாகவும் கோலி தெரிவித்திருந்தார்.
விருப்பமில்லை
இதனிடையே, ஒரு நாள் மற்றும் டி 20 போட்டியில் இரண்டு கேப்டன்கள், இந்திய அணியில் செயல்படுவது வழக்கமில்லை எனக் கூறி, டி 20 மற்றும் ஒரு நாள் போட்டி என இரண்டிலும் ரோஹித் ஷர்மாவை கேப்டனாக பிசிசிஐ நியமித்திருந்தது. இதுகுறித்து பிசிசிஐ தரப்பில், கோலியை டி 20 கேப்டன் பொறுப்பில் தொடர்ந்து செயல்பட நாங்கள் வலியுறுத்தினோம் என்றும், ஆனால் கோலி அதற்கு விருப்பம் தெரிவிக்கவில்லை என்றும் கூறப்பட்டது.
கடும் சர்ச்சை
இதனால் இரண்டிற்கும் புதிய கேப்டனாக ரோஹித் ஷர்மாவை பிசிசிஐ நியமிக்கவும் செய்திருந்தது. ஆனால், பிசிசிஐயின் கருத்தை மறுத்த கோலி, தன்னை டி 20 போட்டியின் கேப்டனாக தொடர்ந்து செயல்பட பிசிசிஐ தரப்பில் இருந்து யாரும் வலியுறுத்தவில்லை என்றும், தன்னை ஒரு நாள் போட்டியின் கேப்டனாக மாற்றியது கூட, கடைசி நேரத்தில் தான் தன்னிடம் தெரிவிக்கப்பட்டது என கோலி கூறியது, கிரிக்கெட் வட்டாரத்தில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
மீண்டும் பரபரப்பு
இந்திய அணி நிர்வாகம் மற்றும் வீரர்களுக்கு இடையே தெளிவான உரையாடல் இல்லை என்றும் விமர்சனம் எழுந்தது. இந்த விவகாரம் ஓரளவுக்கு ஓய்ந்து வந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் இந்த சம்பவம் தொடர்பாக, மற்றொரு பரபரப்பு தகவல் வெளியாகியிருந்தது.
நோட்டீஸ்
அதாவது, பிசிசிஐ குறித்த தனது கருத்திற்கு கோலி விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் ஒன்றை அவருக்கு அனுப்ப வேண்டி, கங்குலி முயற்சிகளை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியானது. நோட்டீஸ் அனுப்பும் பட்சத்தில், தென்னாப்பிரிக்கத் தொடருக்காக இந்திய அணி கிளம்பிச் சென்றதால், டெஸ்ட் கேப்டன் கோலி மற்றும் இந்திய அணி வீரர்களை அது பாதிக்கும் என்பதால், கங்குலி அந்த முடிவை மாற்றி வைத்ததாகவும் கூறப்பட்டது.
கங்குலி சொன்னது என்ன?
கோலி - பிசிசிஐ விவகாரத்தில், கங்குலி நோடீஸ் அனுப்ப இருந்ததாக வெளியான தகவல், மேலும் அதிர்ச்சியை உண்டு பண்ணியது. இந்நிலையில், இது பற்றி கங்குலி கருத்து தெரிவித்துள்ளதாக பல முன்னணி பத்திரிகைகள் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. 'நான் கோலிக்கு நோட்டீஸ் அனுப்ப இருந்ததாக வெளிவரும் தகவலில் துளியும் உண்மையில்லை' என தன்னைக் குறித்த தவறான தகவலை மறுத்துள்ளார்.
மற்ற செய்திகள்