‘நாடு இப்போ இருக்குற நிலைமையில அதுக்கு வாய்ப்பே இல்ல’!.. ஐபிஎல் தொடர் குறித்து கங்குலி ‘முக்கிய’ தகவல்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடர் மீண்டும் இந்தியாவில் நடத்துவது குறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி விளக்கமளித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் 9-ம் தேதி ஐபிஎல் தொடர் தொடங்கியது. இதுவரை 29 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், தொடர் திடீரென பாதியிலேயே நிறுத்தப்பட்டது. ஐபிஎல் தொடரில் விளையாடிய சில கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து, தொடரை தேதி குறிப்பிடாமல் பிசிசிஐ ஒத்திவைத்தது.
இதனை அடுத்து மீண்டும் எப்போது ஐபிஎல் தொடர் தொடங்கும் என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்தது. இதனிடையே கொரோனா பரவலைப் பொறுத்து வரும் செப்டம்பர் மாதம் எஞ்சிய போட்டிகளை நடத்த ஆலோசனை மேற்கொண்டு வருவதாக ஐபிஎல் தலைவர் பிர்ஜீஷ் படேல் தெரிவித்தார். ஆனால் மீண்டும் இந்தியாவில் போட்டிகளை நடத்த வாய்ப்பில்லாததால், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் எஞ்சிய ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவது குறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், ‘தற்போது இந்தியா இருக்கும் நிலைமையில் இந்த ஆண்டு இறுதிவரை ஐபிஎல் நடைபெற வாய்ப்பில்லை. நிலைமை எப்போது கட்டுக்குள் வரும் என்பது தெரியவில்லை.
கொரோனா இரண்டாவது அலை முடிந்து மூன்றாவது நிலை அக்டோபர், நவம்பர் மாதங்களில் வர வாய்ப்புள்ளதாக மருத்துவ குழுவினர் கூறியுள்ளனர். அதனால் நிச்சயம் இந்தியாவில் இந்த தொடரை நடத்த வாய்ப்பு இல்லை’ என கங்குலி திட்டவட்டமாக கூறியுள்ளார். இதனால் எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
மற்ற செய்திகள்