இதை மட்டும் முன்னாடியே கேட்டிருந்தா ‘ஐபிஎல்’ பாதியிலேயே நின்னுருக்காது.. பிடிவாதமாக இருந்ததா பிசிசிஐ..?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடரில் விளையாடிய வீரர்கள் அடுத்தடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டதால், தொடர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கிய ஐபிஎல் தொடர், தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. கிரிக்கெட் வீரர்களுக்கு பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக இந்த தொடர் தற்போதைக்கு நிறுத்தி வைக்கப்படுவதாகவும், மீண்டும் எப்போது போட்டிகள் தொடங்கப்படும் என்றும் பிசிசிஐ தரப்பில் தகவல் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் அனைத்து வீரர்களும் பத்திரமாக வீடு திரும்பி வருகின்றனர்.
நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி வீரர்களான வருண் சக்கரவர்த்தி, சந்தீப் வாரியர் ஆகியோருக்கு தொற்று ஏற்பட்டது. அதனை தொடர்ந்து டெல்லி கேப்பிடல்ஸ் அணி வீரர் அமித் மிஸ்ரா மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் சாஹா என அடுத்தடுத்து கொரோனாவால் வீரர்கள் பாதிக்கப்பட்டனர்.
மேலும் சிஎஸ்கே அணியின் பவுலிங் பயிற்சியாளர் எல்.பாலாஜிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் ஐபிஎல் தொடர் தொடர்ந்து நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனை அடுத்து ஐபிஎல் தொடரை தேதி குறிப்பிடமால் ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது.
இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாக, இந்தியாவில் கொரோனா தீவிரமாக பரவி வருவதால், கடந்த ஆண்டை போலவே ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தலாம் என பிசிசிஐ ஆலோசனை கூட்டத்தில் முன்வைக்கப்பட்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இந்த ஆண்டு நிச்சயம் இந்தியாவில்தான் ஐபிஎல் தொடரை நடத்த வேண்டும் என்று பிசிசிஐ உறுதியாக சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு 13-வது ஐபிஎல் சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. அதனால் இந்த ஆண்டும் அங்கு நடத்தப்பட்டு இருந்தால் தொடருக்கு எந்த பிரச்சனையும் இருந்திருக்காது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் இங்கிலாந்து தொடர் இந்தியாவில் எந்த பிரச்சினையும் இல்லாமல் நடந்து முடித்ததால், அந்த நம்பிக்கையில் இந்தியாவில் ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி முடிவெடுத்ததாக சொல்லப்படுகிறது.
மற்ற செய்திகள்