‘அவர தூக்கிட்டு இவர போடுங்க… அதான் ‘கப்’ கிடைச்சாச்சே..!- இந்திய அணிக்காக ஐடியாக்களை அள்ளித்தட்டும் கம்பீர்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநியூசிலாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றதை அடுத்து டி20 தொடருக்கான வெற்றிக் கோப்பை இந்தியாவுக்குத் தான் என உறுதி ஆகியுள்ளது. இந்த சூழலில் இன்று கொல்கத்தாவில் நடக்கும் போட்டியில் இந்திய அணியில் சில மாற்றங்களை பரிசோதனை முறையில் செய்து பார்க்கலாம் என யோசனை தெரிவித்துள்ளார் கம்பீர்.
நியூசிலாந்து எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை முதல் இரண்டு போட்டிகளை வென்றதன் மூலம் இந்தியா கைப்பற்றி உள்ளது. இன்று மூன்றாவது கடைசி போட்டி நடைபெறுகிறது. இதில் ஆடும் 11 வீரர்கள் பட்டியலில் இன்னும் களம் இறக்கப்படாத வீரர்களை இறக்கி ஆட்டத்தில் தாரளமாக பரிசோதனைகளை மேற்கொள்ளலாம் என கம்பீர் யோசனை கூறியுள்ளார்.
இதன் அடிப்படையில் கம்பீர் கூறுகையில், “டி20 தொடரில் ஜெய்பூர், ராஞ்சி என இரண்டு போட்டிகளிலும் விளையாடிய புவனேஷ்குமாருக்கு இந்த 3-வது போட்டியில் ஓய்வு கொடுத்துவிடலாம். அவருக்கு பதிலாக ஆவேஷ் கானை விளையாட வைக்கலாம். ஐபிஎல் 2021 போட்டித் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கிறார் ஆவேஷ் கான்.
மேலும், கொல்கத்தா மைதானத்துக்கு ஏற்ற பவுலர் ஆக ஆவேஷ் கான் இருப்பார். அந்த மைதானத்தில் ஆவேஷ்-க்கு ஏற்றபடி பந்துகள் நன்றாக பவுன்ஸ் ஆகும். அதனாலே, கொல்கத்தா போட்டியில் ஆவேஷ் கான் விளையாட வேண்டும் என நான் விரும்புகிறேன். ஏற்கெனவே நம் அணியினர் தொடரைக் கைப்பற்றிவிட்டனர். இந்த ஒரு மாற்றத்தால் திறன் அறியும் சோதனையையும் நடத்திக் கொள்ளலாம்.
அதற்காக, போட்டியை இழந்தாலும் பரவாயில்லை என்று நான் சொல்லவில்லை. கோப்பை உறுதி என்றாலும் இன்றைய 3-வது போட்டியையும் கருணையே இல்லாமல் அதிரடியாக விளையாட வேண்டும் என்றே நம் வீரர்களைக் கேட்டுக்கொள்வேன். அழுத்தத்தோடு விளையாட வேண்டியது இல்லை” எனக் கூறியுள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளிலும் போட்டிக்கு ஒரு புது முகம் என இந்திய அணி களம் இறக்கியது. முதல் போட்டியில் வெங்கடேஷ் ஐயர் அறிமுகம் ஆக இரண்டாவது போட்டியில் ஹர்ஷல் படேல் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். வெங்கடேஷ் ஐயருக்கு பந்துவீச வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்றாலும் இதுவரையில் 16 ரன்கள் அடித்துள்ளார். ஹர்ஷல் படேல் 2-வது போட்டியில் சிறப்பாக பந்துவீசி 2 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதையும் பெற்று அசத்தி உள்ளார்.
மற்ற செய்திகள்