"இதுக்கு எல்லாத்துக்கும் காரணமே நீங்க தான்.. உங்கள மட்டும் தான்யா குத்தம் சொல்லணும்.." விளாசித் தள்ளிய 'கம்பீர்'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகொல்கத்தா மற்றும் சென்னை அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற போட்டியில், 18 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி திரில் வெற்றி பெற்றிருந்தது.
இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, 220 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து, கடின இலக்கை நோக்கி ஆடிய கொல்கத்தா அணி, 31 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால், இதன் பிறகு தான் போட்டியின் நிலையே மாறியது. ரசல், தினேஷ் கார்த்திக், கம்மின்ஸ் என அடுத்தடுத்து வந்த கொல்கத்தா வீரர்கள், சென்னை அணிக்கு தண்ணி காட்டினர்.
இருந்த போதும், கடைசியில் விக்கெட்டுகள் இல்லாத காரணத்தால், 18 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே வெற்றி பெற்றது. கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்கள் யாராவது நிலைத்து நின்றிருந்தால், நிச்சயம் கொல்கத்தா அணி எளிதில் வெற்றி பெற்றிருக்கும். இந்நிலையில், கொல்கத்தா அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரருமான கவுதம் கம்பீர் (Gautham Gambhir), கொல்கத்தா அணியின் பேட்டிங்கை விமர்சனம் செய்துள்ளார்.
'கொல்கத்தா அணியின் மேல் வரிசை பேட்ஸ்மேன்கள் மீது தான் குற்றம் சுமத்த வேண்டும். அந்த அணியின் கீழ் வரிசை பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடிய போதும், சிறந்த பார்ட்னர்ஷிப் கிடைக்காத காரணத்தால், தோல்வி அடைய நேரிட்டது. மும்பை மற்றும் பெங்களூர் போன்ற மைதானங்களில், 220 ரன்களை நோக்கி ஆடும் போது, பயப்பட வேண்டிய தேவையில்லை.
2014 ஆம் ஆண்டு ஐபிஎல் இறுதிப் போட்டியின் போது, பஞ்சாப் அணி எங்களுக்கு 200 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இன்னிங்ஸ் இடைவேளையின் போது, எனது அணி வீரர்களிடம் "முதல் 5 - 6 ஓவர்களில், நம்மால் நிச்சயம் வெற்றி பெற முடியாது. ஆனால், 5 - 6 ஓவர்களில் நம்மால், நிச்சயம் எளிதில் தோல்வி அடைய முடியும்" என கூறினேன். போட்டியின் கடைசி 5 ஓவர்களில், 60 அல்லது 80 ரன்கள் வரை தேவைப்பட்டால் கூட, போட்டி நமது கட்டுப்பாட்டில் தான் இருக்கும்.
ஆனால், அதிக ரன்களை சேஸ் செய்யும் போது, முதலிலேயே அவசரப்பட்டு ஆடி, ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை பறிகொடுக்க கூடாது. கொல்கத்தா அணியும் சென்னை அணிக்கு எதிராக அதைத் தான் செய்திருந்தது' என கம்பீர் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்