அப்பாடா..! ஒருவழியா தோனியை பாராட்டிய கம்பீர்.. எல்லாத்துக்கும் தோனி நேத்து எடுத்த அந்த ‘முடிவு’ தான் காரணம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர், சிஎஸ்கே கேப்டன் தோனியை புகழ்ந்து பேசியுள்ளார்.
ஐபிஎல் (IPL) தொடரின் முதல் ப்ளே ஆஃப் (PlayOffs) சுற்று நேற்று துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இதில் தோனி (Dhoni) தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியும், ரிஷப் பந்த் (Rishabh Pant) தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் (DC) அணியும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ப்ரித்வி ஷா 60 ரன்களும், ரிஷப் பந்த் 51 ரன்களும் எடுத்தனர்.
இதனை அடுத்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அதில் ஆட்டத்தின் முதல் ஓவரிலே தொடக்க ஆட்டக்காரர் டு பிளசிஸ் 1 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார். இதனை அடுத்து களமிறங்கிய ராபின் உத்தப்பா, இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டுடன் ஜோடி சேர்ந்தார். இந்த கூட்டணி 110 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைப்பு அசத்தியது.
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஷர்துல் தாகூர், அம்பட்டி ராயுடு அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இந்த நிலையில், கடைசி ஓவரில் 13 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் சிஎஸ்கே அணி இருந்தது. அப்போது ஹாட்ரிக் பவுண்டரி அடித்து தோனி அசத்தினார். இதனால் 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது. இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இறுதிப்போட்டிக்கு சிஎஸ்கே அணி முன்னேறியுள்ளது.
இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் (KKR) அணியின் முன்னாள் கேப்டனுமான கௌதம் கம்பீர் (Gautam Gambhir) தோனியை பாராட்டி பேசியுள்ளார். அதில், ‘ராபின் உத்தப்பாவை (Robin Uthappa) தொடர்ந்து விளையாட வைத்ததற்கு தோனியை பாராட்டியே ஆக வேண்டும். அவர் நினைத்திருந்தால் ரெய்னாவை விளையாட வைத்திருக்கலாம். ஆனால் ஒரு வீரருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்தால், நிச்சயம் அவர் தனது திறமையை நிரூபிப்பார் என்பதை உத்தாப்பா மூலம் தோனி நிரூபித்துள்ளார்.
அதேபோல் உத்தப்பாவை 3-வது ஆர்டரில் களமிறக்கியது சிறந்த முடிவு. அந்த வரிசையில் களமிறங்குவதான் உத்தாப்பாவுக்கு பிடிக்கும். இதை தோனி சரியாக அங்கீகரித்துள்ளார்’ என தோனியை பாராட்டி பேசியுள்ளார். எப்போதும் தோனியை விமர்சித்து பேசும் கம்பீர், தோனியை புகழ்ந்து பேசியது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.
முன்னதாக பேசிய ராபின் உத்தப்பா, ‘கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியில் கம்பீர் தலைமையின் கீழ் விளையாடியபோது பாதுகாப்பாக இருப்பதை உணர்ந்தேன். தற்போது அதை சிஎஸ்கே அணியில் தோனியிடம் உணர்கிறேன்’ என கூறியது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்