‘நல்லாத்தானே ஆடுறாரு… கோலி வந்துட்டா வாய்ப்பு போச்சா..!’- இளம் வீரருக்காக முன்னாள் வீரரின் ‘டிப்ஸ்’..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஷ்ரேயாஸ் ஐயர் இன்று முதல் முறையாக இந்திய டெஸ்ட் அணியின் சார்பில் களத்தில் அறிமுகம் ஆகியுள்ளார். முதல் போட்டியிலேயே ஜடேஜா உடனான கூட்டணியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெற்று வருகிறார் ஷ்ரேயாஸ்.
முதல் வாய்ப்பை சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்ட ஷ்ரேயாஸ் 136 பந்துகளுக்கு 75 ரன்கள் அடித்திருந்தார். இதன் மூலம் இந்திய அணியின் 2-வது நாள் ஆட்டத்தைத் தொடர்ந்து ஜடேஜா உடன் இணைந்து நாளையும் ஆரம்பிக்கிறார் ஷ்ரேயாஸ். மூத்த வீரர் கவாஸ்கர் கைகளால் டெஸ்ட் அணிக்கான அறிமுக தொப்பியை வாங்கிய ஷ்ரேயாஸ் முதல் நாளிலேயே தனது ஆட்டத்தால் பலரையும் கவர்ந்துள்ளார் என முன்னாள் வீரர் விவிஎஸ் லக்ஷ்மண் பாராட்டி உள்ளார்.
லக்ஷ்மண் கூறுகையில், “கவாஸ்கரை ரோல் மாடல் ஆக வைத்து வளர்ந்தவருக்கு அவர் கைகளாலேயே தொப்பி வாங்கிய தருணம் ஷ்ரேயாஸ்-க்கு மிகச்சிறந்த அறிமுகம் ஆக இருந்திருக்கும். முதல் டெஸ்ட் போட்டியான கான்பூர் போட்டியில் ஷ்ரேயாஸ் அறிமுகம் ஆகியிருக்கிறார். இதை முதல் நாள் சிறப்பாகப் பயன்படுத்தி உள்ளார். இந்த முதல் போட்டி முழுவதுமாகவே தனது அத்தனைத் திறன்களையும் களத்தில் இறக்க வேண்டும்.
ஏனென்றால், 2-வது டெஸ்ட் போட்டி மும்பையில் நடக்கும் போது கேப்டன் மற்றும் பேட்ஸ்மேன் ஆக விராட் கோலி அணியில் இணைந்துவிடுவார். அப்போது ஷ்ரேயாஸ்-க்கு டெஸ்ட் தொடரின் 2-வது போட்டியை விளையாட வாய்ப்பு கிடைக்குமா எனத் தெரியவில்லை. என்னைப் பொறுத்த வரையில் 2-வது போட்டியில் வாய்ப்பு குறைவு.
ஆடும் 11 வீரர்கள் பட்டியலில் இந்த முதல் போட்டியில் தான் நிச்சயமாக தனது திறனை வெளிப்படுத்தி வாய்ப்பை முழுவதுமாக ஷ்ரேயாஸ் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஜடேஜா உடனான கூட்டணியில் இன்று ஷ்ரேயாஸ் சிறப்பான தொடக்கத்தையே கொடுத்துள்ளார்” எனக் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்