‘என்ன நினைச்சிட்டு இருக்கீங்க, ஒரு வரமுறை வேண்டாம்... கோலியோட உரிம அது..!’- குரல் கொடுக்கும் இந்திய வீரர்
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணியின் அனைத்து ஃபார்மட்டுகளுக்கும் கேப்டனாக இருந்த விராட் கோலி, நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பையுடன் 20 ஓவர் கிரிக்கெட் கேப்டன்ஸியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து அவர் சற்றும் எதிர்பாராத விதமாக ஒருநாள் ஃபார்மட் கேப்டன்ஸியிலிருந்தும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ விலக்கியது.
இதனால் தற்போது இந்திய டெஸ்ட் அணிக்கு மட்டும் தான் விராட் கோலி, கேப்டனாக பதவி வகித்து வருகிறார். பிசிசிஐ- யின் இந்த முடிவு மிகவும் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது. இது குறித்து பிசிசிஐ அமைப்பின் தலைவர் சவுரவ் கங்குலி, ‘டி20 கேப்டன்ஸி பொறுப்பை விட்டுத் தர வேண்டாம் என்று விராட் கோலியிடம் நான் தனிப்பட்ட முறையில் வலியுறுத்தினேன். அவர் அதை கேட்க விரும்பவில்லை. டி20 மற்றும் ஒருநாள் ஃபார்மட்டுகளுக்கு தனித் தனி கேப்டன்கள் இருக்க வேண்டாம் என்ற நோக்கில் தான் ரோகித் சர்மா பொதுவான கேப்டனாக நியமனம் செய்யப்பட்டார்’ என்று விளக்கம் கொடுத்தார்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் இந்த விவகாரம் குறித்துப் பேசியிருந்த கோலி, ‘என்னிடம் ஒருநாள் கேப்டன் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுவது குறித்து, அறிவிப்பு வெளியாகும் ஒன்றரை மணி நேரத்துக்கு முன்னால் தான் தெரியப்படுத்தினார்கள். யாரும் என்னிடம் இது குறித்துப் பேசி விவாதிக்கவில்லை’ என்று கூறினார்.
கங்குலி சொல்லிய கருத்துக்கு முற்றிலும் மாறான கருத்தை விராட் கோலி தெரிவித்தது பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்நிலையில் மூத்த சுழற் பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா, இந்த மொத்த சர்ச்சை குறித்து, ‘நாட்டுக்காக மிகவும் கடினமாக உழைத்த ஒரு விளையாட்டு வீரரை அணியிலிருந்து நீக்கும் போதோ, பொறுப்பில் இருந்து நீக்கும் போதோ அது குறித்து அவரிடம் முறையாக தெரியப்படுத்த வேண்டும் என்று நான் கருதுகிறேன். ஒரு மூத்த வீரர் சில விஷயங்களில் திறம்பட செயல்படவில்லை என்று கருதினால், அது குறித்து அவருக்குத் தெரியப்படுத்தி சரி செய்ய வேண்டும்’ என்று விராட் கோலிக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.
இந்திய அணியில் கோலிக்கும் ரோகித்துக்கும் இடையில் பனிப் போர் நிலவி வருவதாக தகவல்கள் கசிந்து வரும் நிலையில் அது குறித்து மிஸ்ரா, ‘இருவருக்கும் இடையில் மோதல் என்று வரும் செய்திகள் அனைத்தும் பொய். இருவருமே நேர்மறையான மனிதர்கள். அவர்கள் இருவரும் களத்தில் இருக்கும போது கூட நல்ல முறையில் புரிதல் இருக்கும்.
இருவருமே அணிக்காக 100 சதவீதம் அற்றலை வெளிப்படுத்தக் கூடியவர்கள். விராட் கோலி, இந்திய அணியின் கேப்டனாக மிகச் சிறப்பாக செயல்பட்டுக் காண்பித்துள்ளார். தற்போது ரோகித் சர்மா, அவரின் திறனைக் காட்ட வேண்டிய நேரம் வந்து விட்டது’ என்று இருவருக்கும் ஆதரவாக விளக்கம் கொடுத்துள்ளார்.
மற்ற செய்திகள்