"இது ஒன்னும் அவ்ளோ பிரமாதமான டீம் இல்ல"!.. 'அவங்க 2 பேரும் கண்டிப்பா வேணும்'!.. இந்திய அணிக்கு முன்னாள் வீரர் அட்வைஸ்!.. யார் அந்த இருவர்?.. ஏன்?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியை மீட்டு வர 2 வீரர்களால் தான் முடியும் என இங்கிலாந்து முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய 3வது டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.
இந்நிலையில், அணியில் ஓய்வில் இருக்கும் 2 முக்கிய வீரர்களை அணிக்குள் கொண்டு வருவதே தொடரில் மீள்வதற்கு நல்ல வழி என மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற 3வது போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் இங்கிலாந்து 2 - 1 என்ற புள்ளிக்கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்திய அணியின் கேப்டன் கோலியை தவிர வேறு யாரும் பெரிய அளவில் சோபிக்காததால் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இதற்கிடையே, நேற்றைய போட்டியில் மிடில் ஆர்டரில் இருந்த சூர்யகுமார் யாதவுக்கு பதிலாக ஓப்பனிங்கில் ரோகித் சர்மா சேர்க்கப்பட்டார். இதன் காரணமாக கடந்த போட்டியில் ஓப்பனிங் களமிறங்கி சிறப்பாக ஆடிய இஷான் கிஷான் கீழே செல்ல வேண்டியதாயிற்று. 3வது இடம் விராட் கோலிதாகும். ஆனால் இஷான் சிறப்பாக ஆடியதால் தனது இடத்தை இஷானுக்காக கொடுத்துவிட்டு 4வது வீரராக களமிறங்கினார். எனினும், இஷான் பெரிய அளவில் ஸ்கோர் அடிக்கவில்லை.
இதுகுறித்து பேசியுள்ள வாகன், இந்திய அணியில் ரோகித் சர்மாவை உள்ளே கொண்டு வந்து பேட்டிங்கில் ஒரே ஒரு மாற்றம் செய்திருந்தனர். கடந்த போட்டியில் சிறப்பாக ஆடிய கோலி மற்றும் இஷான் கிஷானை கீழ் இறக்கியது தவறான முடிவு. கே.எல்.ராகுலை மிடில் ஆர்டருக்கு மாற்றி இருக்க வேண்டும்.
அதே போல் இந்திய அணியில் பந்துவீச்சிலும் மாற்றம் வேண்டும். அது உலகின் சிறந்த அணியுடன் விளையாடி வருகிறது என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும். இந்திய அணியை பார்க்கும் போது டெஸ்ட் தொடரில் பந்துவீச்சில் பலமின்றி இருந்த இங்கிலாந்தை பார்ப்பது போல் உள்ளது. ஆனால், இந்திய அணி அதைவிட தற்போது மோசமாக உள்ளது.
இந்திய அணியின் பந்துவீச்சுக்கு பும்ரா மற்றும் ஜடேஜா ஆகியோர் முக்கியமாக தேவை. அவர்கள் இருவரையும் அணிக்குள் கொண்டு வந்தால் வேகப்பந்து வீச்சில் அணிக்கு பும்ரா போன்ற பெரும் பலம் கிடைக்கும்.
அதே போல ஜடேஜாவை கொண்டு வந்தால் பேட்டிங் மற்றும் சுழற்பந்துவீச்சிலும் ஒரு பலம் கிடைக்கும். எனவே, அந்த இரு வீரர்களும் கண்டிப்பாக தேவை என தெரிவித்தார். பும்ரா திருமணத்திற்காகவும், ஜடேஜா தற்போதுதான் காயத்தில் இருந்து மீண்டுள்ளதாலும் அணியில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்