‘அப்போ ரெண்டு பேருமே நோ சொல்லிட்டாங்க’!.. 2007-ல் தோனிக்கு கேப்டன் பதவி எப்படி கிடைத்தது..? பிசிசிஐ முன்னாள் தலைவர் உடைத்த சீக்ரெட்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தோனிக்கு கேப்டன் பதவி எப்படி கிடைத்தது என்பது குறித்து முன்னாள் பிசிசிஐ தலைவர் சரத்பவார் பகிர்ந்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தலைமையிலான இந்திய அணி, கடந்த 2007-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையும், 2011-ம் ஆண்டு ஒருநாள் போட்டிக்கான உலகக்கோப்பையையும் கைப்பற்றியது. அதுமட்டுமல்லாமல் 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கோப்பையையும் தோனி தலைமையில் இந்தியா வென்றது. ஐசிசி நடத்தும் அனைத்து தொடர்களிலும் கோப்பையை வென்ற ஒரே கேப்டன் என்ற சாதனையை தோனி படைத்துள்ளார்.
தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள தோனி, ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக விளையாடி வருகிறார். இந்த நிலையில் தோனி இந்திய அணியின் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து பிசிசிஐ முன்னாள் தலைவரும், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவருமான சரத்பவார் பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து தெரிவித்த சர்த்பவார், ‘கடந்த 2007-ம் ஆண்டு இந்திய அணி இங்கிலாந்துக்கு விளையாட சென்றது. அப்போது ராகுல் டிராவிட்தான் கேப்டன். அந்த சமயம் நானும் இங்கிலாந்தில் இருந்தேன். அப்போது என்னை சந்திந்த ராகுல் டிராவிட், கேப்டன் பொறுப்பு தனது பேட்டிங்கை பாதிப்பதாகவும், அதனால் கேப்டன் பொறுப்பில் இருந்து தன்னை விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
அதனால் சச்சின் டெண்டுல்கரை இந்திய அணியை வழி நடத்துமாறு கேட்டுக் கொண்டேன். ஆனால் அவர் மறுத்துவிட்டார். நீங்கள் இருவரும் அணியை வழி நடத்த விரும்பவில்லை என்றால் நான் செய்வது? என்று சச்சின் டெண்டுல்கரிடம் கேட்டேன். அப்போது, இந்திய அணியை வழி நடத்த நம்மிடம் ஒரு வீரர் இருக்கிறார், அவர் வேறுயாருமில்லை எம்.எஸ்.தோனிதான் என சச்சின் கூறினார். இதன்பின்னர் தோனியிடம் கேப்டன் பொறுப்பை வழங்கினோம்’ என சரத்பவார் தெரிவித்துள்ளார்.
தோனி முதலில் டி20 போட்டிக்கு கேப்டனாக இருந்தார். பின்னர் ஒருநாள், டெஸ்ட் போட்டிக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டார். தோனி தலைமையிலான இந்திய அணி 72 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளது. இதில் 41-ல் வெற்றியும், 28-ல் தோல்வியும் பெற்றுள்ளது. ஒரு போட்டி டிரா, 2 போட்டிகள் முடிவில்லை.
அதேபோல் 200 ஒருநாள் போட்டியில் 110-ல் வெற்றியும், 74-ல் தோல்வியும் அடைந்துள்ளது. 5 போட்டிகள் டிரா, 11 போட்டிகள் முடிவில்லை. தோனி தலைமையில் 60 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இந்திய அணி 27-ல் வெற்றியும், 18-ல் தோல்வியும் அடைந்துள்ளது. 15 போட்டிகள் டிரா ஆகியுள்ளது.
மற்ற செய்திகள்