'ஃபிளைட்ல் நடந்ததுக்கு மன்னிப்பு கேட்டுக்குறேன்'.. இறக்கிவிடப்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஃபிளைட்டில் அண்மையில் நடந்த கசப்பான சம்பவத்துக்கு, தான்தான் காரணம் என்றால் தான் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பதில் அளித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சிட்னியில் இருந்து வாகா வாகா (Wagga Wagga) நகருக்கு பயணிக்கவிருந்த விமானத்தில் சக பயணிகளாக வந்த இரண்டு பெண்களுடன் நடந்துகொண்ட விதம் மற்றும் அதன் பின்னர் உண்டான வாக்குவாதம் காரணமாக, ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரரும் தொடக்க ஆட்டக்காரருமான மைக்கேல் ஸ்லேட்டர் இறக்கிவிடப்பட்டதாகவும், அதன் பின்னர் 30 நிமிடங்கள் கழித்து விமானம் தாமதமாகச் சென்றதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
முதலில் இதுபற்றிய வாக்குவாதம் விமானத்தில் எழுந்தபோது, டென்ஷனான ஸ்லேட்டர் கழிவறைக்குச் சென்றுவிட்டதாகவும், பின்னர், அவர் வெளியில் வரும்வரை காத்திருந்த ஊழியர்கள், தொடர்ந்து அவரை பயணிக்க அனுமதிக்காமல் வலுக்கட்டாயமாக விமானத்தில் இருந்து இறக்கிவிட்டதாகவும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
2014-ல் தனது ஓய்வை அறிவித்த பின்னர், இங்கிலாந்தில் அடுத்த வாரம் நடக்கவுள்ள உலகக் கோப்பை போட்டியில் வர்ணனையாளராக நியமிக்கப்பட்டுள்ள மைக்கேல் ஸ்லேட்டர் இதுபற்றி பேசுகையில், தான் யாருடனும் வாக்குவாதத்தில் ஈடுபடவில்லை என்றும் ஒருவேளை தன்னால் விமானம் தாமதமாகியிருந்தால், அதற்கு மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் நடந்த, ஆஸ்திரேலியாவின் குவாண்டிஸ் விமான நிறுவனம் இந்த சம்பவம் நடந்தது உண்மைதான் என்றும், ஆண் பயணி ஒருவர் கீழே இறக்கிவிடப்பட்டதாகவும் கூறியுள்ளது. ஆனால் அந்த பயணி மைக்கேல் ஸ்லேட்டர் என்று அந்த விமான நிறுவனம் குறிப்பிடவில்லை என்றும், ஆஸ்திரேலியாவின் மெக்குவாரி ஸ்போர்ட்ஸ் நிரூபர்கள் நேரில் பார்த்து, இந்த செய்திகளை வெளியிட்டுள்ளதாகவும் பிபிசி குறிப்பிட்டுள்ளது.