‘யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்’!.. வெளிநாட்டு வீரர்களுக்கு ‘செக்’ வைத்த பிசிசிஐ.. அதிரடி முடிவு..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஎஞ்சிய ஐபிஎல் தொடர்களில் வெளிநாட்டு வீரர்கள் பலர் கலந்துகொள்ள முடியாது என தெரிவித்த நிலையில் பிசிசிஐ ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது.
இந்தியாவில் நடைபெற்ற 14-வது சீசன் ஐபிஎல் தொடரில் விளையாடிய சில வீரர்கள் கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து போட்டிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனை அடுத்து வீரர்கள் அனைவரும் வீடு திரும்பினர். மொத்தம் 60 போட்டிகள் கொண்ட ஐபிஎல் தொடரில், இதுவரை 29 போட்டிகள் மட்டுமே முடிவடைந்துள்ளது. எஞ்சிய 31 போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. அதற்கான வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் வரும் அக்டோபர் மாதம் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இதற்கு தயாராகும் முனைப்பில் சர்வதேச கிரிக்கெட் அணிகள் ஈடுபட்டு வருகின்றன. இதில் இங்கிலாந்து மற்றும் வங்கதேச கிரிக்கெட் வாரியங்கள், தங்கள் நாட்டு வீரர்களை ஐபிஎல் தொடருக்கு அனுப்பமாட்டோம் என தெரிவித்துள்ளன. அதேபோல் ஆஸ்திரேலிய அணியும் இதே குழப்பத்தில் உள்ளது. இதனால் பல வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதற்கு செக் வைக்கும் விதமாக பிசிசிஐ ஒரு அதிரடி முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஐபிஎல் தொடரின் 2-வது பாதியில் பங்கேற்காமல் உள்ள வெளிநாட்டு வீரர்களின் சம்பளத்தை பாதியாக குறைத்து வழங்க வேண்டும் என அந்தந்த அணிகளுக்கு பிசிசிஐ அறிவுறுத்துள்ளது. ஐபிஎல் விதிப்படி, தொடர் பாதியில் ரத்தானால்தான் வீரர்களுக்கு முழு சம்பளமும் வழங்கப்படும். ஆனால் தொடர் மீண்டும் தொடங்கி அதில் வீரர்கள் கலந்துகொள்ளவில்லை என்றால், அவர்களது சம்பளம் பாதியாக குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் சார்பாக விளையாடும் ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடும் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் ஐபிஎல் தொடரில் பங்கேற்க மாட்டார்கள் என சமீபத்தில் தகவல் வெளியானது. இதனால் இவர்கள் நடப்பு ஐபிஎல் தொடரில் எத்தனை போட்டிகளில் விளையாடி உள்ளார்களோ, அதைப் பொறுத்து சம்பளம் வழங்கப்படும் என சொல்லப்படுகிறது.
அதேவேளையில், கடந்த 2011-ம் ஆண்டு இந்திய வீரர்களுக்காக ஐபிஎல் தொடரில் ஒரு ஒப்பந்த முறை கொண்டு வரப்பட்டது. இந்த ஒப்பந்தப்பட்டியலில் இடம்பெற்றுள்ள வீரர்களுக்கு, ஐபிஎல் தொடரின் போது காயம் ஏற்பட்டு விலகினாலோ, பங்கேற்க முடியாமல் போனாலோ, சுயவிருப்பத்தின் பெயரில் விலகினாலோ முழு சம்பளமும் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்