‘142 ஆண்டுகளில்’ முதல் முறை... பிரபல ஆல்ரவுண்டரின் புதிய ‘மாஸ்’ சாதனை...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா இடையேயான டெஸ்ட் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் 142 ஆண்டுகளில் இல்லாத புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.
இங்கிலாந்து அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில் கேப்டவுனில் நடைபெற்று வரும் இரு அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டியில் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.
இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பென் ஸ்டோக்ஸ் 5 கேட்சுகளைப் பிடித்துள்ளார். தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் ஹம்சா, டூபிளசிஸ், வேன் டர் டூசேன், பிரிடோரியஸ், நார்டே ஆகியவர்களின் விக்கெட்டுகளை ஸ்டோக்ஸ் கேட்ச் பிடித்து வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் உலகளவில் ஒரே இன்னிங்ஸில் 5 கேட்சுகளைப் பிடித்த 12-வது வீரர் எனும் சாதனையை ஸ்டோக்ஸ் படைத்துள்ளார். இதற்கு முன்னதாக முதல்முறையாக கடந்த 1936ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையேயான போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ரிச்சார்ட்ஸன் 5 கேட்சுகளை பிடித்துள்ளார்.
இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரை இதுவரை விளையாடியுள்ள 1,019 டெஸ்ட் போட்டிகளில் 23 முறை ஒரு இன்னிங்ஸில் ஒரே வீரர் 4 கேட்சுகளைப் பிடித்துள்ளார். ஆனால் எந்தவொரு வீரரும் ஒரே இன்னிங்ஸில் 5 கேட்சுகளைப் பிடித்ததில்லை. இங்கிலாந்து அணியின் 142 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக ஒரே இன்னிங்ஸில் 5 கேட்சுகளைப் பிடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் ஸ்டோக்ஸ்.
மேலும் இந்தப் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஆன்டர்ஸன் 28வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் அவர் இந்திய வீரர் அஸ்வினின் 27 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள சாதனையை முறியடித்து 8வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்த வரிசையில் இலங்கை முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் 133 டெஸ்ட் போட்டிகளில் 67 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.