இத்தனை வருச ஐபிஎல் சீசன்ல ஒரு தடவை கூட இப்படி நடந்ததே இல்ல.. முதல்முறையா சறுக்கிய சிஎஸ்கே..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇத்தனை வருட ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சறுக்கியுள்ளது.
ஐபிஎல் தொடரின் 7-வது லீக் போட்டி நேற்று மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ராபின் உத்தப்பா மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினர். இதில் ருதுராஜ் கெய்க்வாட் 1 ரன்னில் எதிர்பாராத விதமாக ரன் அவுட்டாகி வெளியேறினார். இதனை அடுத்து களமிறங்கிய மொயின் அலியுடன் ஜோடி சேர்ந்த ராபின் உத்தப்பா அதிரடியாக விளையாடினார். 27 பந்துகளில் 8 பவுண்டரி, 1 சிக்சர் உட்பட அரைசதம் (50 ரன்கள்) விளாசி அசத்தினார்.
இதனை அடுத்து களமிறங்கிய சிவம் துபே தன்பங்கிற்கு சிக்சர், பவுண்டரி விளாசி 49 ரன்கள் எடுத்தார். அதேபோல் மொயின் அலியும் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்துவந்த அம்பட்டி ராயுடு 27 ரன்களும், கேப்டன் ஜடேஜா 17 ரன்களும், விக்கெட் கீப்பர் தோனி 16 ரன்களும் எடுத்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 210 ரன்களை சென்னை அணி எடுத்தது.
இதனைத் தொடர்ந்து 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி லக்னோ அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் விக்கெட் கீப்பர் டி காக் களமிறங்கினர். ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய இந்த ஜோடியை சிஎஸ்கே அணியால் நீண்ட நேரமாக பிரிக்க முடியவில்லை. அப்போது பிரிட்டோரியஸ் வீசிய ஓவரில் கே.எல்.ராகுல் 40 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனை அடுத்து வந்த மனிஷ் பாண்டே 5 ரன்களில் வெளியேறினார். இவரைத் தொடர்ந்து டி காக் 61 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் ஜோடி சேர்ந்த எவின் லூயிஸ் (55* ரன்கள்)-ஆயுஷ் படோனி (19* ரன்கள்) கூட்டணி சிஎஸ்கே அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். அதனால் 19.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 211 எடுத்து லக்னோ அணி அபார வெற்றி பெற்றது.
இப்போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம் சிஎஸ்கே அணி, ஐபிஎல் தொடரில் முதல் சறுக்கலை சந்தித்துள்ளது. முன்னதாக நடந்த கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியைத் தழுவியது. தற்போது லக்னோ அணிக்கு எதிரான போட்டியிலும் சிஎஸ்கே அணி தோல்வியை தழுவியுள்ளது. ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே அணி, முதல் இரண்டு போட்டிகளில் தொடர்ந்து தோல்வியை சந்திப்பது இதுவே முதல் முறை. இது ரசிகர் மத்தியில் சற்று சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்