அப்பா சலூன் கடையில் .. ஒரே ஓவரில் கிரிக்கெட் உலகை திரும்பி பார்க்க வைத்த மகன்.. யார் இந்த குல்தீப் சென்?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் நேற்று மோதி இருந்த போட்டியில், ராஜஸ்தான் அணி கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்று, புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில், 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக, அதிரடி காட்டி ஆடிய ஹெட்மயர், 59 ரன்கள் எடுத்திருந்தார். தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய லக்னோ அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
உச்சகட்ட பரபரப்பு
இதனால், கடைசி இரண்டு ஓவர்களில் லக்னோ அணியின் வெற்றிக்கு 34 ரன்கள் தேவைப்பட்டது. கைவசம் இரண்டு விக்கெட்டுகள் மட்டுமே இருக்க, மார்கஸ் ஸ்டியோனிஸ் மற்றும் ஆவேஷ் கான் ஆகியோர் களத்தில் இருந்தனர். ராஜஸ்தான் அணியின் கை அதிகம் ஓங்கி இருந்த நிலையில், 19 ஆவது ஓவரை பிரஷித் கிருஷ்ணா வீசினார். ஆனால், இந்த ஓவரில் இரண்டு சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரியை ஸ்டியோனிஸ் அடிக்க, மொத்தம் 19 ரன்கள் எடுக்கப்பட்டது.
ஆட்டத்தின் கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட, அந்த ஓவரை ஐபிஎல் தொடரில் அறிமுக போட்டியில் களமிறங்கி இருந்த குல்தீப் சென் வீச வந்தார். முதல் பந்தில் ஆவேஷ் கான் சிங்கிள் கொடுக்க, ஸ்டியோனிஸ் ஸ்ட்ரைக் எடுத்ததும், போட்டி முடிந்து விடும் என்றே சிலர் கருதினர். ஒரு பக்கம் அனுபவ வீரர் பேட்டிங் செய்ய, மறுபக்கம் இளம் வீரர் பந்து வீச வந்ததால், உச்சகட்ட பரபரப்பு நிலவியது.
ஒரே ஓவரில் திசை மாறிய வாழ்க்கை
இந்த ஓவரை யாரும் எதிர்பாராத வகையில், அசத்தலாக வீசிய குல்தீப் சென், மூன்று பந்துகளை ஸ்டியோனிஸ்ஸிற்கு டாட் பாலாக வீச, அடுத்த இரண்டு பந்துகளில், ஃபோர் மற்றும் சிக்ஸர் சென்ற போதும், மூன்று ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி த்ரில் வெற்றி பெற்றது. அவரை போல்ட், சாம்சன் உள்ளிட்ட பலரும் பாராட்ட, கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் இளம் வீரரின் அசத்தலான கடைசி ஓவரை பெரிய அளவில் புகழ்ந்து வருகின்றனர்.
யார் இந்த குல்தீப் சென்?
மத்தியப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த குல்தீப் சென்னை, ராஜஸ்தான் அணி 20 லட்ச ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்திருந்தது. கடந்த 2018 ஆம் ஆண்டு, மத்தியப்பிரதேச அணிக்காக ரஞ்சி தொடரில் களமிறங்கிய குல்தீப் சென், அந்த தொடரில் 25 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். தொடர்ந்து, சையது முஷ்டாக் அலி தொடரிலும் நன்றாக பந்து வீச, அவர் மீது பலரின் கவனமும் திரும்பி இருந்தது.
அதே போல, குல்தீப் சென்னின் தந்தை ராம்பால் சென், சிறிய சலூன் கடை ஒன்றை நடத்தி வருகிறார். ஐபிஎல் தொடர் மூலம், பல இளம் வீரர்கள் தங்களின் குடும்ப நிலை அனைத்தையும் தாண்டி சாதித்து வருவதை நாம் பார்த்திருக்கிறோம்.
அந்த வகையில், தன்னுடைய ஒரே ஓவரால், கிரிக்கெட் உலகை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த குல்தீப் சென்னும் ஏழ்மையான சூழ்நிலையில் இருந்து கடினமாக உழைத்து, இன்று சாதித்துக் காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்