ஜெயிக்குறமோ, தோக்குறமோ.. மொதல்ல சண்டை செய்யணும்.. அதுக்கு இந்த பையன் தாங்க உதாரணம்.. ஏன் தெரியுமா..?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தாலும் ஷர்துல் தாகூரை ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.
தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை 2 -1 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்க அணி கைப்பற்றியது.
இந்த நிலையில் இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் போட்டி நேற்று போலண்ட் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 4 விக்கெட் இழப்புக்கு 296 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் டெம்பா பவுமா 110 ரன்களும், வான் டெர் டஸ்ஸன் 129 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியை பொறுத்தவரை பும்ரா 2 விக்கெட்டுகளும், அஸ்வின் 1 விக்கெட்டும் எடுத்தனர்.
இதனை அடுத்து 297 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக நடப்பு கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் ஷிகர் தவான் களமிறங்கினர். இதில் 12 ரன்கள் எடுத்திருந்த போதும் கே.எல்.ராகுல் ஆட்டமிழந்தார்.
இதனை அடுத்து களமிறங்கிய விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்த ஷிகர் தவான் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த கூட்டணியை நீண்ட நேரமாக தென் ஆப்பிரிக்க அணியால் பிரிக்க முடியவில்லை. இதில் ஷிகர் தவான் 79 ரன்களும், விராட் கோலி 51 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இவர்கள் இருவரும் ஆட்டமிழந்த பின் களமிறங்கிய ரிஷப் பந்த் (16 ரன்கள்), ஸ்ரேயாஸ் ஐயர் (17 ரன்கள்), வெங்கடேஷ் ஐயர் (2 ரன்கள்), அஸ்வின் (4 ரன்கள்) ஆகிய வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர். அதனால் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு கைநழுவி சென்று கொண்டிருந்தது.
இந்த சமயத்தில் களமிறங்கிய இளம் வீரர் ஷர்துல் தாகூர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் அரைசதம் (50* ரன்கள்) விளாசி கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அசத்தினார். ஆனாலும் 50 ஓவர்கள் முடிவில் 265 ரன்கள் மட்டுமே எடுத்து இந்திய அணி தோல்வியை தழுவியது.
இந்த நிலையில் இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டுமென கடைசிவரை போராடி ஷர்துல் தாகூரை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தாலும், 8-வது வீரராக களமிறங்கி அரை சதம் விளாசியது மிகப்பெரிய விஷயம் என முன்னாள் வீரர்கள் பலரும் ஷர்துல் தாகூரை புகழ்ந்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்