இதுக்கும் மேல கோலிக்கு பிரஷர் குடுத்துறாதீங்க.. டக்குனு ‘அந்த’ முடிவை எடுத்திருவாரு.. கொதிக்கும் ரசிகர்கள்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுவிராட் கோலி டெஸ்ட் போட்டியில் கேப்டன் பொறுப்பில் இருந்து திடீரென விலகியதை கேட்டு கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தலை சிறந்த கிரிக்கெட் வீரரான கோலிக்கு தற்போது நடக்கும் சம்பவங்களை குறிப்பிட்டு பல்வேறு ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள்.
கேப்டன் பொறுப்பு
2014-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியை கோலி முதல் முறையாக தலைமையேற்று வழி நடத்தினர். பின்னர் கேப்டனாகவே கோலி பதவியில் தொடர்ந்தார். கடைசியாக தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுன் டெஸ்டில் கேப்டனாக விளையாடினார். இதில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் தமது கேப்டன் பதவி விலகுவதாக விராட் கோலி அறிவித்தார்.
விராட் கோலி கடிதம்
அதில், ‘அணியை சரியான திசையில் கொண்டு செல்ல 7 வருட கடின உழைப்பை செலுத்தி, இடைவிடாத விடாமுயற்சியுடன் தினமும் போராடினேன். இப்போது பதவியில் இருந்து ஒதுங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. எல்லா விஷயங்களும் ஒரு கட்டத்தில் நிறுத்தப்பட வேண்டும். இந்தியாவின் டெஸ்ட் கேப்டனான எனக்கு அந்த நேரம் இப்போதுதான் வந்துள்ளது. எனது இந்த பயணத்தில் பல ஏற்றங்கள் மற்றும் சில தாழ்வுகள் உள்ளன. ஆனால் ஒருபோதும் முயற்சியின்மை அல்லது நம்பிக்கையின்மை இருந்ததில்லை. நான் செய்யும் எல்லாவற்றிலும் எனது 120 சதவீதத்தை வழங்க வேண்டும் என்று நான் எப்போதும் நம்புகிறேன். அதை என்னால் செய்ய முடியாவிட்டால் இது சரியான செயல் அல்ல என்று எனக்குத் தெரியும்.
எம்.எஸ் தோனிக்கு நன்றி
என் மனதில் எனக்கு முழுமையான தெளிவு உள்ளது. எனது அணிக்கு நான் நேர்மையற்றவனாக இருக்க முடியாது. இவ்வளவு நீண்ட காலத்திற்கு என் நாட்டு அணியை வழிநடத்தும் வாய்ப்பை வழங்கியதற்காக பிசிசிஐக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். முக்கியமாக முதல் நாளிலிருந்தே அணிக்காக நான் கொண்டிருந்த பார்வையை ஏற்றுக் கொண்டு செயல்பட்ட அணியின் அனைத்து வீரர்களும் என்னை எந்த சூழ்நிலையிலும் கைவிடவில்லை. இந்த பயணத்தை மறக்க முடியாததாகவும் அழகாகவும் மாற்றியுள்ளீர்கள். டெஸ்ட் கிரிக்கெட்டில் எங்களை தொடர்ந்து மேல்நோக்கி நகர்த்துவதற்காக எங்கள் பயணத்தில் பின்புலமாக இருந்த ரவி பாய் (முன்னாள் இந்திய தலைமை பயிற்சியாளர்) மற்றும் ஆதரவுக்குழுவினர், எங்களுடைய பார்வையை உயிர் கொடுத்துக்கொண்டே பெரிய பங்களிப்பை வழங்கினீர்கள். கடைசியாக என்னை நம்பி, இந்திய கிரிக்கெட்டை முன்னோக்கி கொண்டு செல்லக்கூடிய திறமையான ஒரு கேப்டனாக என்னைக் கண்டறிந்த எம்.எஸ் தோனிக்கு நன்றி’ என விராட் கோலி தனது கடிதத்தில் கூறியிருந்தார்.
சாதனை கேப்டன் யார்?
முன்னதாக கடந்த ஆண்டு எந்தவித முன்னறிவிப்புமின்றி திடீரென கோலி ஒருநாள் சர்வதேச அணி கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டபோது, அந்த நடவடிக்கை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பிசிசிஐக்கு எதிராக கடும் விமர்சனம் எழுந்தது. ஏன்னெனில் இந்திய கிரிக்கெட் அணியை ஒருநாள் போட்டிகளில் கபில் தேவ், முகமது அசாருதீன், சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், மகேந்திர சிங் தோனி, செளரவ் கங்குலி என பலரும் 70 போட்டிகளுக்கு மேல் தலைமை தாங்கி வழிநடத்தி இருக்கிறார்கள். இதில் அதிக வெற்றி விகிதம் கொண்டவர் யார் என்றால் அது விராட் கோலி தான் என்பது மறுக்க முடியாத உண்மை. மிகப்பெரிய அளவில் இன்றைக்கு கொண்டாடப்படும் மகேந்திர சிங் தோனி இந்திய அணியை ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக 200 போட்டிகளை வழிநடத்தி 110 போட்டிகளில் வென்று 59.52% வெற்றி விகிதம் கொண்டுள்ளார்.
விராட் கோலி சாதனை
ஏன் 90-களில் அதிகம் பேசப்பட்டவரான முகமது அசாருதீன் 174 போட்டிகளை வழி நடத்தி 90 போட்டிகளில் வென்று 54.16% தான் எடுத்தார். இன்றைக்கு பிசிசிஐ தலைவராக உள்ள சவுரவ் கங்குலி 147 போட்டிகளை வழி நடத்தி 76 போட்டிகளில் வென்று 53.52% உள்ளது. விராட் கோலி 95 போட்டிகளில் தலைமை தாங்கி 65 போட்டிகளில் வென்று 70.43% என அதிகபட்ச வெற்றி விகிதத்தை வைத்திருந்தார். இதனால்தான் கிரிக்கெட் ரசிகர்கள், விராட் கோலி அவமதிக்கப்பட்டதாக கருதி கொதித்தனர். இந்நிலையில் தற்போது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து கேப்டன் பொறுப்பில் விராட் கோலி விலகி இருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பிரஷர் கொடுத்துறாதீங்க
கோலி கேப்டன்சி விலகல் குறித்து கிரிக்கெட் ரசிகர்களின் கருத்துக்களை அப்படியே பார்ப்போம். கேப்டன்ஷிப் போனா கூட பரவால்ல.. இதுக்கும் மேல கோலிக்கு பிரஷர் குடுத்துறாதீங்க, கோபக்காரன்.. டக்குனு ரிட்டையர் ஆகுறேன்னு சொல்லிட்டு போயிடுவாரு, அவரு பண்ணுன அவ்ளோ சாதனைக்கு வேற கிரிக்கெட் போர்டா இருந்துருந்தா இந்நேரத்துக்கு சிலையே வச்சுருப்பாய்ங்க.. நீங்க என்னடான்னா.. இப்படி பண்ணீட்டீங்களேப்பா.
சச்சின் சாதனைகள்
ஒரு சச்சின் ரசிகனா இவன் ஆடுன ஒவ்வொரு ஆட்டமும் பாக்கும்போது தலைவன் ரெக்கார்ட தட்டி தூக்கப் போறான்னு பீதியா இருக்கும். ஆனா இப்ப நடத்துறத பாத்தா, சச்சினோட ஒட்டுமொத்த ரெக்கார்டையும் கோலி சல்லி சல்லியா நொருக்கனும்னு தோணுது என்று ரசிகர் ஒருவர் கூறியுள்ளார்.
அவமானம்
இன்னொரு ரசிகர் கூறும் போது, கிரிக்கெட்டில் சாதனைகளை செய்த கபில்தேவ், அசாருதீன், தோனி, போன்றவர்களை பெரும் அவமானத்துடன்தான் இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தி வந்துள்ளது. இதில் கோலி மட்டும் விதிவிலக்கா என்ன?.. கோலி தொடர்ந்து ஆட வேண்டும், எல்லா சாதனைகளையும் அடித்து நொறுக்கும் வரை ஆட வேண்டும் என்றார்.
சிங்கம் இல்லாத காடு
இன்னொரு கோலி ரசிகர் ட்விட்டரில் கூறும் போது, சிங்கம் இல்லாத காடு எவ்வளவு வெறிச்சோடிக் காணப்படுமோ, அதைவிட ஒருபடி மேலாக, கோலி கேப்டனாக இல்லாத டெஸ்ட் கிரிக்கெட், இனி களையிழக்கப் போகிறது என்றார்.
மற்ற செய்திகள்